கர்நாடக வெள்ள பாதிப்புகளுக்கு டிசம்பர் மாதத்திற்குள் மத்திய அரசு முழு நிவாரண தொகையை வழங்கும் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி
கர்நாடக வெள்ள பாதிப்புகளுக்கு டிசம்பர் மாதத்திற்குள் மத்திய அரசு முழு நிவாரண தொகையை வழங்கும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
சிக்கமகளூரு,
கர்நாடக வெள்ள பாதிப்புகளுக்கு டிசம்பர் மாதத்திற்குள் மத்திய அரசு முழு நிவாரண தொகையை வழங்கும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
டிசம்பர் மாதத்திற்குள்....
சித்ரதுர்காவில் நேற்று நடந்த சரண கலாசார திருவிழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டார். இந்த திருவிழா முடிந்ததும் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூருவில் வருகிற 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 3 நாட்கள் கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நடக்க உள்ளது. இந்த கூட்டம் முடிந்ததும் மழையால் பாதிக்கப்பட்ட சில மாவட்டங்களில் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். கர்நாடகத்தில் வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.1,200 கோடியை இடைக்கால நிவாரணமாக வழங்கி உள்ளது.
வருகிற டிசம்பர் மாதத்திற்குள் மத்திய அரசிடம் இருந்து வெள்ள பாதிப்புகளுக்கு முழு நிவாரண தொகையும் கிடைக்கும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். மத்திய அரசு இனி கர்நாடகத்திற்கு நிதி ஒதுக்காது என்று குமாரசாமி கூறி உள்ளார். நாங்கள் மத்திய அரசிடம் பேசி ரூ.1,200 கோடியை வாங்கி வந்தது குமாரசாமிக்கு பெரியதாக தெரியவில்லை. நாங்கள் பேசி நிதி வாங்கியதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பெலகாவியில் நடத்தப்படும்
பெலகாவியில் ஆண்டுதோறும் கர்நாடக சட்டசபையில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு வடகர்நாடகத்தில் அதிக மழை பாதிப்பால் மக்கள் கஷ்டத்தில் உள்ளார்கள் என்றும், இதனால் இந்த ஆண்டு பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த வேண்டாம் என்றும் பெலகாவி மாவட்ட கலெக்டர் அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதனை ஏற்றுக்கொண்டு இந்த ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடர் பெங்களூருவில் நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் வழக்கம்போல பெலகாவியில் கூட்டத் தொடர் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story