விஜயாப்புரா அருகே, கள்ளத்தொடர்பால் பயங்கரம் ஆயுதங்களால் தாக்கி தந்தை, மனைவி கொலை தலைமறைவான தொழிலாளிக்கு வலைவீச்சு


விஜயாப்புரா அருகே, கள்ளத்தொடர்பால் பயங்கரம் ஆயுதங்களால் தாக்கி தந்தை, மனைவி கொலை தலைமறைவான தொழிலாளிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Oct 2019 3:30 AM IST (Updated: 6 Oct 2019 11:57 PM IST)
t-max-icont-min-icon

விஜயாப்புரா அருகே ஆயுதங்களால் தாக்கி தந்தை, மனைவியை கொலை செய்துவிட்டு தொழிலாளி தலைமறைவாகி விட்டார்.

பெங்களூரு, 

விஜயாப்புரா அருகே ஆயுதங்களால் தாக்கி தந்தை, மனைவியை கொலை செய்துவிட்டு தொழிலாளி தலைமறைவாகி விட்டார். கள்ளத்தொடர்பு காரணமாக இந்த இரட்டை கொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

தந்தை, மனைவி கொலை

விஜயாப்புரா மாவட்டம் இன்டி தாலுகா சிருதூரு கிராமத்தை சேர்ந்தவர் மாலப்பா தர்மண்ணா பூஜாரி (வயது 63). இவரது மகன் ராகவேந்திரா புட்டண்ணா பூஜாரி. இவரது மனைவி ரேணுகா (32). இந்த தம்பதிக்கு 6 வயதில் பவானி என்ற மகளும், 4 வயதில் கிருஷ்ணா என்ற மகனும் உள்ளனர். இன்டி புறநகர் கோடகி கிராசில் உள்ள ஸ்ரீசைலா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மாலப்பா, ராகவேந்திரா, ரேணுகா ஆகியோர் தொழிலாளிகளாக வேலை செய்தனர். அங்குள்ள சிறிய வீட்டில் 3 பேரும் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில், நேற்று மதியம் தோட்டத்தில் இருந்த தனது தந்தை மாலப்பா, மனைவி ரேணுகாவை ஆயுதங்களால் தாக்கி ராகவேந்திரா கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் தனது 2 குழந்தைகளுடன் ராகவேந்திரா தலைமறைவாகி விட்டார். தோட்டத்தில் மாலப்பாவும், ரேணுகாவும் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி இன்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கள்ளத்தொடர்பு

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர். பின்னர் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், மாலப்பா தனது மருமகள் ரேணுகாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி ராகவேந்திராவுக்கு தெரியவந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது தந்தை மற்றும் மனைவியை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துவிட்டு, 2 குழந்தைகளுடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இன்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராகவேந்திராவை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த இரட்டை கொலை சம்பவம் இன்டியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story