12 அமைச்சர்கள் முற்றுகையிட்டு வாக்கு சேகரிப்பு: நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் வருகை
12 அமைச்சர்கள் முற்றுகையிட்டு அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து வருவதால் நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
நெல்லை,
12 அமைச்சர்கள் முற்றுகையிட்டு அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து வருவதால் நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நாளை மறுநாள் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.
இடைத்தேர்தல்
நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23-ந் தேதி தொடங்கி, 30-ந் தேதி முடிவடைந்தது. கடந்த 3-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி, இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன் உள்பட 23 பேர் போட்டியிடுகிறார்கள். இதையடுத்து வேட்பாளர்கள் தங்கள் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக அமைச்சர்களும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
12 அமைச்சர்கள்
தமிழக அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ராஜலட்சுமி, செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, காமராஜ், கடம்பூர் ராஜூ, எம்.ஆர்.விஜயபாஸ்கர், டாக்டர் விஜயபாஸ்கர், வளர்மதி, பாஸ்கரன், வெல்லமண்டி நடராஜன் ஆகிய 12 அமைச்சர்கள் தொகுதியை முற்றுகையிட்டு அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்கள்.
காலையிலும், மாலையிலும் அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். கிராமங்களில் வீடு, வீடாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதுதவிர ரவீந்திரநாத் எம்.பி., தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், ஜெயபால், சிவபதி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்-அமைச்சர்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 12, 13, 16 ஆகிய தேதிகளில் நாங்குநேரி தொகுதியில் திறந்த ஜீப்பில் கிராமம், கிராமமாக சென்று அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
வருகிற 15, 16, 18 ஆகிய தேதிகளில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்ய உள்ளார். அவர்களை வரவேற்க அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
காங்கிரஸ் வேட்பாளர்
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக அந்த கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் ஆகியோர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், எம்.பி.க்கள் வசந்தகுமார், திருநாவுக்கரசர் ஆகியோரும் நாங்குநேரி தொகுதிக்கு வந்து கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
நாங்குநேரி தொகுதியில் தி.மு.க. பொறுப்பாளராக ஐ.பெரியசாமி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அவருடன் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆங்காங்கே தேர்தல் அலுவலகங்களும் திறக்கப்பட்டு உள்ளன.
மு.க.ஸ்டாலின் வருகை
இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (புதன்கிழமை) நாங்குநேரிக்கு வருகிறார். அவர் வருகிற 10, 15, 16 ஆகிய தேதிகளிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். அவரை வரவேற்க கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
மேலும், கனிமொழி எம்.பி., மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோரும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்கள். வருகிற 14-ந் தேதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்றும் (திங்கட்கிழமை), 14, 15, 18 ஆகிய தேதிகளிலும் அக்கட்சி வேட்பாளர் ராஜநாராயணனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். சுயேச்சை வேட்பாளர்களும் தங்கள் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். அமைச்சர்கள் முற்றுகை மற்றும் முக்கிய தலைவர்கள் வருகையால் நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது.
Related Tags :
Next Story