பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பெண்களுக்கு ரூ.2 லட்சம் கடனுதவி கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பெண்களுக்கு ரூ.2 லட்சம் கடனுதவி கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 7 Oct 2019 3:30 AM IST (Updated: 7 Oct 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய பொற்கால திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுவதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் புதிய பொற்கால திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுவதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கடனுதவி

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

பொது கால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை ஆகும்.

பெண்களுக்கு....

பெண்களுக்காக புதிய பொற்கால திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும். சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு பெண் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம் ஆகும். இந்த கடன் உதவி பெற சுயஉதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். மகளிர் திட்டம், திட்ட அலுவலரால் தரம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

இதே போன்று சுய உதவிக்குழுவில் உள்ள ஆண்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சமும், ஒரு குழுவுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சமும் கடன் வழங்கப்படுகிறது. இதற்கான ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும். கறவை மாடுகள் வாங்க ரூ. 60 ஆயிரம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இதற்கான ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் ஆகும்.

எனவே தகுதியும், விருப்பமும உள்ளவர்கள், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளில் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story