கோவில்பட்டி அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து


கோவில்பட்டி அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து
x
தினத்தந்தி 7 Oct 2019 4:00 AM IST (Updated: 7 Oct 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

தீப்பெட்டி தொழிற்சாலை

கோவில்பட்டி ஜோதி நகரை சேர்ந்தவர் செல்வமோகன் (வயது 52). இவர் கோவில்பட்டி அருகே உள்ள கழுகாச்சலபுரம் கிராமத்தில் முழு எந்திர தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். சரசுவதி பூஜையை முன்னிட்டு நேற்று காலையில் தீப்பெட்டி தொழிற்சாலையில் சுத்தம் செய்யும் பணி நடந்தது. இதில் தொழிற்சாலை பணியாளர்கள் பலர் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பணியாளர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே வந்தனர்.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரி இசக்கி தலைமையில் கோவில்பட்டியில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களும், விளாத்திகுளத்தில் இருந்து ஒரு தீயணைப்பு வாகனமும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றன.

6 மணி நேரம்...

காலை 11.30 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தை 6 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டி மூலப்பொருட்கள், கட்டிட கூரைகள், எந்திரங்கள் மற்றும் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் கட்டிடமும் சேதம் அடைந்தது.

இந்த விபத்து குறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story