“மக்களுக்கு தேவையான திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவேன்” காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் பிரசாரம்


“மக்களுக்கு தேவையான திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவேன்” காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் பிரசாரம்
x
தினத்தந்தி 7 Oct 2019 4:00 AM IST (Updated: 7 Oct 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

“மக்களுக்கு தேவையான திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவேன்“ என காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் பிரசாரம் செய்தார்.

களக்காடு, 

“மக்களுக்கு தேவையான திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவேன்“ என காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் பிரசாரம் செய்தார்.

வேட்பாளர் ரூபி மனோகரன்

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் நேற்று களக்காடு பகுதியில் உள்ள கிராமங்களில் 2-வது நாளாக திறந்த ஜீப்பில் சென்றும், தெருக்களில் நடந்து சென்றும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அவர் களக்காடு பஸ்நிலையம் அண்ணா சிலை அருகில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார்.

பின்னர் அவர் வியாசபுரம், காந்தி வீதி, பெரிய தெரு, புதுத்தெரு, சிதம்பராபுரம், மூங்கிலடி, ஜவகர்வீதி, நடுத்தெரு, சன்னதி தெரு, கலுங்கடி, மேலபத்தை, அம்பேத்கர்நகர், மஞ்சுவிளை, கீழபத்தை, மேல கருவேலன்குளம், கீழ கருவேலன்குளம், வடமலைசமுத்திரம், தம்பிதோப்பு, சிங்கம்பத்து, நாகன்குளம், பெருமாள்குளம், கோவில்பத்து, நேதாஜி நகர், சூரன்குடி கஸ்பா, சூரன்குடி நாடார் குடியிருப்பு, கடம் போடு வாழ்வு நாடார் குடியிருப்பு, காலனி, கடம்போடுவாழ்வு கஸ்பா, வடிவாள்புரம், வடுகச்சிமதில் கஸ்பா, வடக்கு புளியங்குளம், தெற்கு புளியங்குளம், கோவிலம்மாள்புரம் கஸ்பா, மேலமலையனேரி, குட்டுவன்குளம், காமனேரி, உதய மார்த்தாண்டபேரி, சவளைக்காரன்குளம், கீழுர்,திரட் டூர், தோப்பூர், சத்திரகுடியிருப்பு, எஸ்.என்.பள்ளிவாசல், சீவலப்பேரி காலனி, முத்துநகர், சேர்வராயபுரம், ராமகிருஷ்ணபுரம், வடக்கு சாலைப்புதூர், நடுசாலைப்புதூர் ஆகிய கிராமங்களுக்கு சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

என்னை வெற்றி பெற செய்தால், தொகுதியில் மக்களுக்கு தேவையான நலத்திட்டங் களை எந்த பிரதிபலனும் இல்லாமல் விரைவாக நிறைவேற்றுவேன். நான் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறிய வன் என்பதால், ஏழை, எளிய மக்களின் தேவைகளை நான் அறிவேன். தொகுதியில் உள்ள அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் முன்னேற பாடுபடுவேன். அதுபோல குடிநீர், சாலை வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறை வேற்றி தருவேன். எனக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். அப்போது காங்கிரஸ் மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார், தி.மு.க. நகர செயலாளர் பி.சி.ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிர்வாகிகள் கூட்டம்

களக்காட்டில் தி.மு.க.-காங் கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திருநாவுக்கரசர் எம்.பி. கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வெற்றிக் கூட்டணி என்பது நிரூபணம் ஆகிவிட்டது. தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே இருக்கிறது. பொது தேர்தலில் வெற்றி பெற்று ஸ்டாலின் தமிழக முதல்வராக நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் நாம் வெற்றி பெற வேண்டும்“ என்றார்.

கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர் ஐ.பெரியசாமி, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், எம்.பி.க்கள் வசந்தகுமார், ஞானதிரவியம், மாவட்ட காங்கிரஸ் மகளிர் அணி தலைவி தனித்தங்கம், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் நாங்குநேரியில் உள்ள தேர்தல் காரியாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசார வருகை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு பேசினார்.

திருமாவளவன் பிரசாரம்

காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து, ஏர்வாடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரசாரம் செய்தார்.

Next Story