பாதி உடைந்து கரை ஒதுங்கிய கேரள படகு - போலீசார் கைப்பற்றி விசாரணை


பாதி உடைந்து கரை ஒதுங்கிய கேரள படகு - போலீசார் கைப்பற்றி விசாரணை
x
தினத்தந்தி 7 Oct 2019 4:15 AM IST (Updated: 7 Oct 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

உச்சிப்புளி அருகே பாதி உடைந்த நிலையில் கரை ஒதுங்கிய கேரளாவை சேர்ந்த படகை மண்டபம் கடலோர போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே தலைத்தோப்பு கடற்கரையில் உடைந்த நிலையில் படகு ஒன்று கரை ஒதுங்கி இருந்தது. அந்த படகில் மெர்சி பீட்டர் என்று எழுதப்பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மண்டபம் கடலோர போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அந்த படகில் எழுதப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கேரள மாநிலம் பொழியூர் பகுதியை சேர்ந்த பீட்டர் என்பவருக்கு சொந்தமான படகு என்பது தெரியவந்தது.

சில வாரங்களுக்கு முன்பு படகின் உரிமையாளர் பீட்டர் மற்றும் மீனவர்கள் அந்தோணியார் பிச்சை, அனு, கிளிட்டஸ், டென்சன், அப்சலான் ஆகிய 6 பேர் மீன்பிடிக்க சென்றுள்ளனர். நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது திடீரென வீசிய பலத்த காற்றில் படகின் முன்பக்கம் சேதமடைந்து உடைந்து விட்டதாம். இதையடுத்து தண்ணீரில் தத்தளித்த அவர்களை அந்த வழியாக மற்றொரு படகில் வந்தவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

நடுக்கடலில் படகு உடைந்தது குறித்து படகின் உரிமையாளர் பீட்டர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்ததும் தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள கடலில் விடப்பட்ட படகானது காற்றின் வேகத்தில் எப்படியோ இழுத்து வரபட்டு, உச்சிப்புளி அருகே கரை ஒதுங்கி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். அந்த படகை கைப்பற்றிய மண்டபம் கடலோர போலீசார், இதுதொடர்பாக உச்சிப்புளி பகுதி மீனவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

தற்போது கரை ஒதுங்கியுள்ள உடைந்த படகின் மற்றொரு பகுதி உச்சிப்புளி மற்றும் மண்டபம் கடலோர பகுதிகளில் கரை ஒதுங்கக்கூடும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.

Next Story