ராமநாதபுரம் நகராட்சியில் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம்


ராமநாதபுரம் நகராட்சியில் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம்
x
தினத்தந்தி 7 Oct 2019 3:45 AM IST (Updated: 7 Oct 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி நகராட்சி பகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 1,162 பேர் அதிகம் உள்ளனர்.

ராமநாதபுரம்,

மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த 4-ந்தேதி வெளியிடப்பட்டது. இதன்படி மாவட்ட அளவில் 11 லட்சத்து 22 ஆயிரத்து 441 வாக்காளர்கள் உள்ளனர். ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டு பகுதியில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை உள்ளது. தற்போது வெளியிடப்பட்ட பட்டியலில் ராமநாதபுரம் நகராட்சியில் மொத்தம் 55,463 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களாக 27,145 பேரும், பெண் வாக்காளர்களாக 28,307 பேரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 1,162 பேர் அதிகம். இதேபோல நகராட்சி பகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் மூன்றாம் பாலினத்தவர் 11 பேர் உள்ளனர்.

கடந்த (2016) சட்டமன்ற தேர்தலின்போது ராமநாதபுரம் நகராட்சியில் 57,384 பேர் வாக்காளர்களாக இருந்தனர். தற்போதைய வாக்காளர் எண்ணிக்கையை விட கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது 1,921 வாக்காளர்கள் கூடுதலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்கம், இரட்டை பதிவு நீக்கம் போன்ற நடவடிக்கை காரணமாகவும், இறந்தவர்கள், வெளியூர் சென்று நிரந்தரமாக தங்கியவர்கள் நீக்கப்பட்டுள்ளதாலும் கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலில் இருந்தவர்களை விட தற்போது குறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது புதிய வாக்காளர் சேர்ப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது தற்போதைய எண்ணிக்கையை விட கூடுதலான வாக்காளர்கள் இடம் பெறும் வாய்ப்புள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story