நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரங்களில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்


நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரங்களில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Oct 2019 10:30 PM GMT (Updated: 6 Oct 2019 9:40 PM GMT)

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரங்களில் நிழல்தரும் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்,

ஆர்.காவனூர் அருகே தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரங்களில் நிழல்தரும் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்து பேசியதாவது:- தமிழ்நாடு அரசு சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்தி பசுமையான சூழ்நிலையை உருவாக்கிடும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சாலையோரங்களில் வேம்பு, புங்கை போன்ற நிழல் தரும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்திற்கு உட்பட்ட ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி மற்றும் திருவாடானை நெடுஞ்சாலைத்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட சாலைகளில் இந்த ஆண்டு மொத்தம் 5,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து மரக்கன்றுகள் நடுவதற்கு நெடுஞ்சாலை துறை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதுவரை ஒவ்வொரு பிரிவுக்கு உட்பட்ட சாலைகளில் 500 மரக்கன்றுகள் வீதம் 2,500 மரக்கன்றுகள் நடப்பட்டு தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் பிரிவிற்கு உட்பட்ட ராமநாதபுரம்-நயினார்கோவில் சாலையில் 500 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் வறட்சியான காலங்களில் ஈரப்பதமாக இருப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் குழிகள் அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார். அதனை தொடர்ந்து சாலைகளில் விபத்துகளை தடுக்கும் நோக்கில் திருப்புல்லாணி-சேதுக்கரை சாலையில் ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலும், திருப்புல்லாணி-திருஉத்தரகோசமங்கை சாலையில் ரூ.9 லட்சம் 90 ஆயிரம் மதிப்பிலும் அமைக்கப்பட்ட சாலை பாதுகாப்பு உபகரணங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முருகன், உதவி கோட்ட பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் முருகானந்தம், தாசில்தார் தமிழ்ச்செல்வி மற்றும் அலுவலர்கள், நெடுஞ்சாலை துறை சார்ந்த பணியாளர்கள் உடனிருந்தனர்.

Next Story