ஆயுதங்களுடன் காரை நிறுத்தி விட்டு வனப்பகுதிக்குள் தப்பி ஓடிய 3 பேர் சிக்கினர்
ஆயுதங்களுடன் காரை நிறுத்திவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி ஓடிய 3 பேர், வனத்துறையினரிடம் சிக்கி உள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே உள்ளது இடுக்கொரை. இந்த கிராமத்தில் கடந்த 4-ந் தேதி இரவு 8 மணியளவில் வெடி சத்தம் கேட்டது. உடனே கிராம மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது கார் ஒன்று அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றது.
இதை பார்த்து சந்தேகம் அடைந்த கிராம மக்கள், அந்த கார் சென்ற திசைக்கு எதிர் திசையில் வந்து கொண்டிருக்கும் பஸ்சில் பயணிக்கும் தங்களது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சாலையின் குறுக்கே பஸ்சை நிறுத்தி, காரை மடக்கினர். பின்னர் காரில் வந்தவர்களிடம், இடுக்கொரையில் வெடி சத்தம் கேட்டது தொடர்பாக விசாரித்தனர்.
மேலும் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசாரின் வாகனம் அங்கு வந்தது. இதை பார்த்ததும் காரில் வந்தவர்கள் கீழே இறங்கி, அருகில் உள்ள வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர். போலீசார் காரை சோதனையிட்டபோது, அதில் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அரிவாள்கள் சிக்கின. உடனே அவற்றையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வனப்பகுதிக்குள் தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் உத்தரவின்பேரில் வனவர் சக்திவேல், வன காப்பாளர் வீரமணி ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் இடுக்கொரை வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது வனத்துறையினரிடம் 3 பேர் சிக்கினர். விசாரணையில் அவர்கள் குன்னூர் அருகே உள்ள மஞ்சக்கம்பையை சேர்ந்த மருது பாண்டியன்(வயது 25), பக்காசூரன் மலைப்பகுதியை சேர்ந்த மகேந்திரன்(26), இடுக்கொரை அணில்காடு பகுதியை சேர்ந்த முருகன்(45) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் கடந்த 4-ந் தேதி இடுக்கொரையில் நடந்த சம்பவத்தின்போது, வனப்பகுதிக்குள் தப்பி ஓடியவர்கள் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story