ஞாயிற்றுக்கிழமைதோறும் நடக்கும் இயற்கை விவசாய பொருட்கள் விற்பனைக்கான ‘நம் சந்தை’ - வேலூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்


ஞாயிற்றுக்கிழமைதோறும் நடக்கும் இயற்கை விவசாய பொருட்கள் விற்பனைக்கான ‘நம் சந்தை’ - வேலூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 Oct 2019 4:00 AM IST (Updated: 7 Oct 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் இயற்கை விவசாய பொருட்களை விற்பனை செய்வதற்காக நம் சந்தை எனும் சந்தையை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். இந்த சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், பொதுமக்களுக்கு நஞ்சு இல்லாத இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளை விற்பனை செய்யவும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ‘நம் சந்தை’ என்ற இயற்கை விவசாய பொருட்கள் விற்பனை சந்தை திறக்க மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி வேலூர் அண்ணா சாலையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை சந்தை செயல்படும் வகையில் நம் சந்தை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் சிவராமன் முன்னிலையில், கலெக்டர் சண்முகசுந்தரம் நம் சந்தையை தொடங்கி வைத்து தனது வீட்டுக்கு தேவையான காய்கறிகள், நாட்டு மாட்டில் இருந்து கறக்கப்பட்ட பால் ஆகியவற்றை பணம்கொடுத்து வாங்கினார்.

பின்னர் இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:-

இயற்கை விவசாயத்தால் நஞ்சு இல்லாத காய்கறிகள் கிடைக்கிறது. இதுபோன்ற இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள், நாட்டு மாட்டு பால், சிறுதானியங்கள் மற்றும் நாட்டுக்கோழி முட்டை, தேன், போன்ற பொருட்கள் இங்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரை இந்த சந்தை செயல்படும். இயற்கை விவசாய பொருட்கள் அனைத்தும் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கும்.

இங்கு கடைவைக்க 60-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். பொறியியல் பட்டதாரிகள்கூட இந்த இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இங்கு விற்பனைக்கு கொண்டுவருவது இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட பொருட்கள்தானா என்பதை உறுதி செய்து, அதற்கான விலையை நிர்ணயம் செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு கூட புற்றுநோய் வருகிறது. இயற்கைக்கு முரணான உணவுபழக்கங்களே அதற்கு காரணம். இயற்கை விவசாய பொருட்களை சாப்பிடுவதன்மூலம் ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். எனவே நாமும், நமது தலைமுறையினரும் ஆரோக்கியமாக வாழ இயற்கை விவசாய பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார். இதில் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் ரூபன் ஆஸ்டின், நம் சந்தை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story