பா.ஜனதா சார்பில் போட்டியிடும் நிதேஷ் ரானேக்கு எதிராக வேட்பாளரை நிறுத்திய சிவசேனா
பா.ஜனதா சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்-மந்திரி நாராயண் ரானேயின் மகன் நிதேஷ் ரானேவுக்கு எதிராக சிவசேனா வேட்பாளரை நிறுத்தி உள்ளது.
மும்பை,
பா.ஜனதா சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்-மந்திரி நாராயண் ரானேயின் மகன் நிதேஷ் ரானேவுக்கு எதிராக சிவசேனா வேட்பாளரை நிறுத்தி உள்ளது.
நிதேஷ் ரானே போட்டி
மராட்டிய சட்டசபை தேர்தலை பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன. இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் நீண்ட இழுபறி நிலவி வந்தது. இந்தநிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய 2 நாள் இருந்தபோது 2 கட்சிகளும் கூட்டணியை உறுதிப்படுத்தின.
எனினும் தொகுதி பங்கீடு குறித்த விவரங்களை அதன்பிறகு தான் அறிவித்தன. இதில் சிந்துதுர்க் பகுதியில் உள்ள கன்காவ்லி தொகுதியில் பா.ஜனதா சார்பில் முன்னாள் முதல்-மந்திரி நாராயண் ரானேயின் மகன் நிதேஷ் ரானே வேட்பாளராக கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டார்.
சிவசேனா வேட்பாளர்
நாராயண் ரானேயின் மகனுக்கு சீட் கொடுக்க கூடாது என சிவசேனா ஆரம்பத்தில் இருந்தே பா.ஜனதாவை வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நிதேஷ் ரானேவுக்கு பா.ஜனதா சீட் கொடுத்தது சிவசேனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சிவசேனா நிதேஷ் ரானேவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி உள்ளது. கன்காவ்லியில் நிதேஷ் ரானேவுக்கு எதிராக சிவசேனாவின் சதீஸ் சாவந்த் போட்டியிடுகிறார்.
இந்த விவகாரம் குறித்து சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில், " நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதும், பா.ஜனதா நிதேஷ் ரானேயை கடைசி நேரத்தில் வேட்பாளராக அறிவித்து உள்ளது. ரானே குடும்பத்துக்கு எதிரான எங்களின் எதிர்ப்பை தீவிரப்படுத்தி உள்ளோம். இது சிவசேனாவுக்கும், நாராயண் ரானேவுக்கும் இடையேயானது " என கூறப்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள பா.ஜனதாவுக்கு எதிராக சிவசேனா வேட்பாளரை நிறுத்தி உள்ளது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story