ஆயிரம்விளக்கு அருகே கூவம் ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு மற்றொரு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை


ஆயிரம்விளக்கு அருகே  கூவம் ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு மற்றொரு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 7 Oct 2019 3:50 AM IST (Updated: 7 Oct 2019 3:50 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஆயிரம் விளக்கு அருகே கூவம் ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒரு சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளான்.

சென்னை,

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்தவர் சிவா. இவருடைய மகன் ரித்தீஷ்குமார்(வயது 13). இவர், நேற்று தனது நண்பர்களான பிரதீப்(8), ஸ்டீபன்(13) மற்றும் 5 பேருடன் சேர்ந்து திடீர்நகர் பகுதியில் கூவம் ஆற்றின் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது கூவம் ஆற்றில் இறங்கிய ரித்தீஷ்குமார், பிரதீப், ஸ்டீபன் ஆகியோர் சேற்றில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சகநண்பர்கள், கூச்சலிட்டனர்.

சிறுவர்களின் சத்தம்கேட்டு ஓடிவந்த அந்த பகுதி பொதுமக்கள், சேற்றில் சிக்கி தவித்த ஸ்டீபனை மட்டும் மீட்டனர். உடனடியாக அவனை ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவனுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த எழும்பூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பெருமாள்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், கூவம் ஆற்றில் மூழ்கிய மற்ற 2 பேரையும் தேடினர்.

நீண்டநேர தேடுதலுக்கு பிறகு சிறுவர்கள் ரித்தீஷ்குமார் மற்றும் பிரதீப் இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். சேற்றில் சிக்கிய இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டனர்.

இதுபற்றி ஆயிரம்விளக்கும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான 2 சிறுவர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கஸ்தூரிபா காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான சிறுவர்கள் இருவரும் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து அங்கு கிரிக்கெட் விளையாடியதாகவும், அப்போது கூவம் ஆற்றில் விழுந்த பந்தை எடுக்க முயன்றபோது 2 பேரும் நீரில் மூழ்கி பலியானதாகவும், கூவம் ஆற்றில் நண்பர்களுடன் குளித்து விளையாடியபோதுதான் இருவரும் நீரில் மூழ்கி இறந்ததாகவும் கூறப்படுகிறது.

கூவம் ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story