மதுரையில் செல்போன் பறிக்க முயன்றவரை 3 மாணவர்கள் குத்திக்கொன்ற பயங்கரம்


மதுரையில் செல்போன் பறிக்க முயன்றவரை 3 மாணவர்கள் குத்திக்கொன்ற பயங்கரம்
x
தினத்தந்தி 7 Oct 2019 4:45 AM IST (Updated: 7 Oct 2019 4:19 AM IST)
t-max-icont-min-icon

கத்தியை காட்டி செல்போன் பறிக்க முயன்றவரை, அதே கத்தியால் 3 மாணவர்கள் குத்திக் கொன்ற பயங்கர சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை, 

மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து எல்லீஸ்நகருக்கு செல்வதற்கு மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் படிக்கட்டுடன் கூடிய நடைபாதை உள்ளது.

இந்த நடைபாதையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடப்பதாக எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

கொலை செய்யப்பட்ட அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து அறிய போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது, அவர் மதுரை தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த சையது அபுதாகீர்(வயது 35) என்றும், 3 மாணவர்களால் அவர் குத்திக்கொலை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:-

பாலத்தின் அடியில் சையது அபுதாகீர் நின்றிருந்த போது, அந்த வழியாக கல்லூரி மாணவர்கள் 2 பேரும், பள்ளிக்கூட மாணவர் ஒருவர் என மொத்தம் 3 பேர் வந்துள்ளனர். அவர்களிடம் சையது அபுதாகீர், கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறிக்க முயன்றுள்ளார். அப்போது, அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக அந்த மாணவர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால், சையது அபுதாகீர் கத்தியால் அவர்களை தாக்க முயன்ற போது, அந்த 3 பேரும் கத்தியை அவரிடம் இருந்து பிடுங்கினர். பின்னர் சையது அபுதாகீரை சரமாரியாக குத்தியதாக தெரிகிறது.

இதில் காயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து இறந்தார். பின்னர் மாணவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக சற்று நேரத்தில் அந்த 3 மாணவர்களையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கத்தியை காட்டி மாணவர்களிடம் செல்போன் பறிக்க முயன்றவர், அதே கத்தியாலேயே மாணவர்களால் கொலை செய்யப்பட்டது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story