போலீசார் குறைகேட்பு கூட்டம்: ரவுடிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்


போலீசார் குறைகேட்பு கூட்டம்: ரவுடிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 7 Oct 2019 4:30 AM IST (Updated: 7 Oct 2019 4:51 AM IST)
t-max-icont-min-icon

ரவுடிகளின் நடமாட்டத்தை போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் கூறினார்.

புதுச்சேரி,

புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள வடக்கு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், நாகராஜ், சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரியா, கலையரசன், திருமுருகன், வீரபுத்திரன், குமார், ராஜேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் போலீசார் தங்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதாகவும், கூடுதல் காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்து பேசிய போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், உங்களின் கோரிக்கைகள் பற்றி போலீஸ் தலைமையிடத்தில் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் அவர் கூறுகையில், தமிழகம் மற்றும் பிறமாநிலங்களை சேர்ந்த ரவுடிகள் புதுவையில் ஊடுருவாமல் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். குற்றப்பிரிவு போலீசார் மட்டுமின்றி அனைத்து போலீசாரும் ரவுடிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் அந்த பகுதிகளை சேர்ந்த லாஸ்பேட்டை, கோரிமேடு போலீசார் விழிப்புடன் இருக்கவேண்டும். வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் போலீசாருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

Next Story