தம்பதிக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த சிறுமி, மர்ம காய்ச்சலுக்கு பலி


தம்பதிக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த சிறுமி, மர்ம காய்ச்சலுக்கு பலி
x
தினத்தந்தி 8 Oct 2019 10:45 PM GMT (Updated: 8 Oct 2019 2:51 PM GMT)

காங்கேயம் அருகே தம்பதிக்கு திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த மாணவி, மர்ம காய்ச்சலுக்கு பலியானாள். தவமிருந்து பெற்ற ஒரே குழந்தையும் இறந்து விட்டதால் பெற்றோர் சோகத்தில் உள்ளனர்.

காங்கேயம்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை அடிவாரம் சரவணா நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது40). இவர் மலை அடிவாரத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பேபி (37). இந்த தம்பதியின் மகள் வர்ஷினி (6). சிவன்மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 1 -ம் வகுப்பு படித்து வந்தாள். வர்ஷினிக்கு கடந்த 6-ந் தேதி மாலை திடீரென மர்ம காய்ச்சல் வந்துள்ளது.

மேலும் அதை தொடர்ந்து இரவு வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்துபோன வர்ஷினியின் பெற்றோர், அவளை சாவடிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர் மாத்திரை கொடுத்து, காய்ச்சல் சரியாகவில்லை என்றால் 3 நாட்கள் கழித்து மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வரும்படி கூறியுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு சென்ற பிறகும் சிறுமிக்கு காய்ச்சல் குறையவில்லை. இதனால் உடனடியாக சென்னிமலையில் உள்ள தனியார் மருத்துவனைக்கு காரில் அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் கதறியழுத சிறுமி வர்ஷினியின் பெற்றோர் தங்கள் வீட்டிற்கு மாணவியின் உடலை கொண்டு சென்றனர். பின்னர் இரவு வர்ஷினியின் உடலை அங்குள்ள இடுகாட்டில் அடக்கம் செய்தனர். மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி வர்ஷினியின் தந்தை கோபாலகிருஷ்ணன் கூறும்போது “ எங்களுக்கு திருமணமாகி நீண்ட காலம் குழந்தை இல்லை.

16 வருடங்களுக்கு பிறகு எங்கள் மகள் வர்ஷினி பிறந்தாள். கடந்த 6-ந் தேதி என் மகளுக்கு காய்ச்சல் வந்தது. தொடர்ந்து வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டது.

இதனால் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று பார்த்தோம். டாக்டர் சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் தவமிருந்து பெற்ற ஒரே மகளும் மர்ம காய்ச்சலுக்கு பலியாகிவிட்டாள் . இது என்ன வகை காய்ச்சல் என்பது உடனடியாக தெரியவில்லை” என்றார்.சிறுமியின் பெற்றோர் அழுதது அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது.

மர்ம காய்ச்சலுக்கு பள்ளி சிறுமி பலியானதை தொடர்ந்து சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் நோய் தடுப்பு நடமாடும் வாகனத்துடன் முகாமிட்டுள்ளனர். இதில் செவிலியர்கள் மற்றும் 20 சுகாதார பணியாளர்களுடன் சிவன்மலை அடிவாரத்தில் உள்ள சரவணா நகரில் முகாமிட்டு சுகாதார பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

அங்குள்ள ஓவ்வொரு வீடாக சென்று பாத்திரம், தொட்டிகளில், பானைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நீர் மற்றும் அந்த பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரிலும் மருந்து தெளித்து வருகிறார்கள்.

மேலும் அங்குள்ள வீடுகள் மற்றும் வீதிகளில் தேங்கி நிற்கும் மழை நீர் மற்றும் சுற்று வட்டரப்பகுதியில் கொசு மருந்து அடித்தும் வருகிறார்கள். அந்த பகுதியில் வேறு யாராவது காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்றும் விசாரித்து வருகிறார்கள்.

Next Story