சிறு குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் உதவி - மாவட்ட கலெக்டர் தகவல்


சிறு குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் உதவி - மாவட்ட கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 9 Oct 2019 4:30 AM IST (Updated: 8 Oct 2019 8:32 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் உதவி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சம் ரூ.1 லட்சம் வங்கிக் கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீத அரசு மானியம் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற சாதிச்சான்று, வருமான சான்று மற்றும் இருப்பிட சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதார ர் சிறு குறு விவசாயி என்பதற்கான சான்றினை தாசில்தாரிடம் இருந்து பெற வேண்டும். நில உடைமைக்கு ஆதாரமாக கணினி வழி பட்டா மற்றும் அடங்கல் நகல் இருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய விவசாயிகள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக தரைதளத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Next Story