மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தவறான தகவலை தருவதா? பா.ஜனதா எதிர்ப்பு


மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தவறான தகவலை தருவதா? பா.ஜனதா எதிர்ப்பு
x
தினத்தந்தி 9 Oct 2019 4:15 AM IST (Updated: 8 Oct 2019 8:41 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக தவறான தகவலை தெரிவிப்பதற்கு பாரதீய ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் நாராயணசாமி மக்களுக்கான நல்ல திட்டங்களை மத்திய அரசு கொண்டுவரும் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. நீட் தேர்வினை பாரதீய ஜனதா அரசுதான் கொண்டுவந்தது என்ற தவறான தகவலை மக்களுக்கு தொடர்ந்து அளித்து வருகிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2-வது அரசில்தான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது மத்திய அரசு மாணவர்களுடைய மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், ஏழை, எளிய மக்களின் பொருளாதாரத்தை கருத்தில்கொண்டும் ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் ஆகிய நிறுவனங்களிலும் நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற அறிவித்துள்ளது. இதை கண்டிப்பதாக முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.

மருத்துவ படிப்பில் சேருவதற்கு 3 தேர்வுகளை அதாவது, நீட், ஜிப்மர், எய்ம்ஸ் ஆகிய தேர்வுகளை சந்திப்பதால் மாணவர்கள் கடுமையான மனஉளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர். அதுமட்டுமல்லாமல் நுழைவுத்தேர்வு கட்டணம், பயிற்சி கட்டணம் என பல்வேறு நிலைகளில் பொருளாதாரத்தை பெற்றோர்கள் இழந்துள்ளனர்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு அனைத்து மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கும் ஒரே நுழைவுத்தேர்வாக நீட் தேர்வு மட்டும் போதும் என்று அறிவித்துள்ளது. நீட் தேர்வு மூலம் ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்திருப்பதை மனதார வரவேற்கிறோம். தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய மருத்துவ ஆணையத்தின் திருத்தங்களால் புதுவை மாநிலத்தில் இனி கட்டப்பஞ்சாயத்து செய்து மருத்துவ இடங்களை பெற தேவையில்லை.

தேசிய மருத்துவ ஆணையத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள திருத்தங்களின்படி சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் தானாகவே 50 சதவீத இடங்களை மாநில அரசின் ஒதுக்கீடாக கொடுக்கவேண்டும் என்பது கட்டாயமாகி உள்ளது. இந்த திட்டத்தை மறைக்கும் வகையில் சட்டமன்றத்திலே தனியார் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற இடஒதுக்கீடு மசோதா கொண்டு வருகிறோம் என்று நாடகத்தை முதல் அமைச்சர் அரங்கேற்றி உள்ளார்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story