திருமணமான 6 மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலை


திருமணமான 6 மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலை
x
தினத்தந்தி 9 Oct 2019 4:45 AM IST (Updated: 8 Oct 2019 8:58 PM IST)
t-max-icont-min-icon

குடும்ப தகராறில் திருமணமான 6 மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.

திருபுவனை,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நடுவீரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருடைய மகன் சிவா (வயது35). புதுவை மதகடிப்பட்டு-மடுகரை சாலையில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கும், காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றத்தை சேர்ந்த விஜயலட்சுமி (28) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

பின்னர் புதுமண தம்பதி மதகடிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வெறுப்படைந்த விஜயலட்சுமி கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதைத்தொடர்ந்து மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை சிவா சமாதானப்படுத்தி மீண்டும் தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். நேற்று முன்தினம் காலை சிவா வழக்கம் போல் கடைக்கு சென்று விட்டார். பகல் 11 மணி அளவில் விஜயலட்சுமி தனது கணவருக்கு போன் செய்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிவா அலறியடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடிவந்தார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் மின்விசிறியில் விஜயலட்சுமி சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை கண்டு திடுக்கிட்டார்.

உடனே தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சமையல் அறையில் கியாஸ் சிலிண்டரை திறந்து தீ வைத்தார். இதில் குபீரென தீப்பிடித்து சிவாவின் உடலில் தீப்பற்றியது. இதனால் அலறி துடித்த சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

புதுமண தம்பதியின் வீட்டில் திடீரென கரும்புகை வெளியே வந்ததை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருபுவனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது சிவா- விஜயா தம்பதி பிணமாக கிடப்பது தெரியவந்தது. அங்கிருந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்ததில் குடும்ப தகராறில் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தநிலையில் திடீரென புதுமண தம்பதி தூக்குப் போட்டும், தீவைத்தும் தற்கொலை செய்து விபரீத முடிவை தேடிக் கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் மடுகரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story