நுங்கம்பாக்கத்தில் துணிகரம்: வங்கி அதிகாரி வீட்டில் 116 பவுன் தங்க நகைகள் கொள்ளை


நுங்கம்பாக்கத்தில் துணிகரம்: வங்கி அதிகாரி வீட்டில் 116 பவுன் தங்க நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 9 Oct 2019 4:00 AM IST (Updated: 8 Oct 2019 10:44 PM IST)
t-max-icont-min-icon

சென்னை நுங்கம்பாக்கத்தில் வங்கி அதிகாரி வீட்டில் 116 பவுன் தங்க நகைகள் கொள்ளை போய் உள்ளது. இதுதொடர்பாக அவருடைய வீட்டின் வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 50). தனியார் வங்கி ஒன்றில் துணை தலைவராக உள்ளார். இவர் கடந்த 5-ந்தேதி அன்று குடும்பத்துடன், சென்னை கிழக்கு கடற்கரை சாலை வட நெம்மேலியில் தனக்கு சொந்தமான பண்ணை வீட்டுக்கு சென்றார்.

பின்னர் 6-ந்தேதி நள்ளிரவு நுங்கம்பாக்கம் வீட்டுக்கு திரும்பினார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் பீரோவில் வைத்திருந்த 116 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.

இதுகுறித்து விஸ்வநாதன் நுங்கம்பாக்கம் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

விஸ்வநாதன் வீட்டில் புஷ்பா நகரை சேர்ந்த சத்தியா என்ற பெண் வேலை பார்த்து வருகிறார். விஸ்வநாதன் குடும்பத்துடன் வெளியே செல்லும் போது வீட்டு சாவியை சத்தியாவிடம் தான் ஒப்படைத்து செல்வதும், வீட்டு வேலை முடிந்தவுடன் சத்தியா வீட்டின் கீழ்தளத்தில் உள்ள பெட்டியில் சாவியை வைத்துவிட்டு செல்வதும் வழக்கம் என்று தெரிகிறது.

எனவே சந்தேகத்தின் அடிப்படையில் சத்தியாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சத்தியா வீட்டுச்சாவியை பெட்டியில் வைப்பதை நோட்டமிட்டு, அதனை எடுத்து யாரேனும் கைவரிசை காட்டினார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story