சவுதி அரேபியா, துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.87 லட்சம் தங்கம் பறிமுதல், இளம்பெண் கைது


சவுதி அரேபியா, துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.87 லட்சம் தங்கம் பறிமுதல், இளம்பெண் கைது
x
தினத்தந்தி 9 Oct 2019 4:30 AM IST (Updated: 8 Oct 2019 10:47 PM IST)
t-max-icont-min-icon

சவுதி அரேபியா, துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.87½ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, தங்கக்கடத்தலில் ஈடுபட்டதாக இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் பகுதியை சேர்ந்த தமீர் (வயது 38) என்பவர் வந்தார். அவர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்குபின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் இருந்த எல்.இ.டி. விளக்கை பிரித்து பார்த்தபோது, அதற்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அதன்பின்னர், ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

அதேபோல் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த நைனா முகமது (22), ரகமத் அலி (23), திருவள்ளூரை சேர்ந்த ஷேக் முகமது (35), சேலத்தை சேர்ந்த சிவசந்திரன் (32) ஆகியோரை தனியறையில் வைத்து சோதனை செய்தபோது, அவர்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடமிருந்து, ரூ.53 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 350 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

மேலும் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ராபியா (29) என்ற இளம் பெண்ணின் சூட்கேசை திறந்து சோதனை செய்தபோது, சூட்கேசின் கைப்பிடியில் தங்கத்தை கம்பிகளாக மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அந்த பெண்ணிடம் இருந்து ரூ.22 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 595 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

இதையடுத்து, இளம்பெண் ராபியா உள்பட 6 பேரிடமும் இருந்து ரூ.87 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 245 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதில் ராபியாவை கைது செய்த அதிகாரிகள், மற்ற 5 பேர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

Next Story