தானே தொகுதியில் நவநிர்மாண் சேனா வேட்பாளருக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு


தானே தொகுதியில் நவநிர்மாண் சேனா வேட்பாளருக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு
x
தினத்தந்தி 9 Oct 2019 4:00 AM IST (Updated: 9 Oct 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

தானே தொகுதியில் நவநிர்மாண் சேனா வேட்பாளருக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து உள்ளது.

தானே,

நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் சமீபகாலமாக நெருக்கம் காட்டி வருகின்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதே காங்கிரஸ் கூட்டணிக்குள் நவநிர்மாண் சேனாவை கொண்டு வர சரத்பவார் முயற்சி மேற்கொண்டார். ஆனால் அது சாத்தியமில்லாமல் போனது. சட்டசபை தேர்தலிலும் இந்த கூட்டணி கைகூடவில்லை.

இந்தநிலையில் நவநிர்மாண் சேனாவுக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனுவை திரும்ப பெற்ற சம்பவம் நடந்து உள்ளது. தானே சட்டமன்ற தொகுதியில் நவநிர்மாண் சேனா சார்பில் அவினாஷ் ஜாதவும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுபாஷ் தேசாயும் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்தநிலையில் நவநிர்மாண் சேனாவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சுபாஷ் தேசாய் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்று உள்ளார். கட்சியின் மேலிட உத்தரவை அடுத்து அவர் வேட்பு மனுவை திரும்ப பெற்றதாக கூறப்படுகிறது.

இதேபோல தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஜித்தேந்திர ஆவாத்துக்கு ஆதரவாக மும்ரா-கல்வா தொகுதியில் நவநிர்மாண் சேனா வேட்பாளரை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர கல்யாண் புறநகர் தொகுதியில் நவநிர்மாண் சேனா வேட்பாளர் ராஜூ பாட்டீலுக்கு எதிராகவும் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை.

தானே மாவட்டத்தில் 18 தொகுதிகளில் 213 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story