கீரமங்கலம் அருகே அம்பலத்திடலில் பழங்கற்கால கோடரி கண்டெடுப்பு


கீரமங்கலம் அருகே அம்பலத்திடலில் பழங்கற்கால கோடரி கண்டெடுப்பு
x
தினத்தந்தி 9 Oct 2019 4:30 AM IST (Updated: 9 Oct 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

கீரமங்கலம் அருகே உள்ள அம்பலத்திடலில் இரும்பு காலத்திற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பழங்கற்கால கோடரி கண்டெடுக்கப்பட்டது.

கீரமங்கலம்,

கீழடியில் ஆய்வு மேற்கொண்டது போல புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள அம்பலத்திடலிலும் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டு புதைந்துகிடக்கும் தமிழர்களின் வரலாற்றை வெளிக் கொண்டு வரவேண்டும் என நேற்று முன்தினம் தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தினர் மீண்டும் ஆய்வுக்கு சென்றனர். அப்போது சில இடங்களில் பழங்கால சுடுமண் கட்டுமானங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதேபோல சுண்ணாம்பு கலைவைகளை கொண்டு தாழிகள் புதைக்கப்பட்டு உள்ளதையும் கண்டறிந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பரவிக் கிடந்த பானை ஓடுகள், கற்களுக்கு அருகில் ஒரு பழங்கற்கால கோடரி கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், இரும்பு காலத்திற்கு முன்பு இந்த கற்கோடரி பயன்படுத்தப்பட்டது. 8.5 செ.மீ நீளம் கொண்டதாக உள்ளது. இதன் காலம் சுமார் 3 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு செல்லும். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே கற்கோடரி கண்டெடுக்கப்பட்டு உள்ளதால் இந்த இடத்தை தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டால் இன்னும் பல சான்றுகள் கிடைக்கும் என்றனர்.

முதல் கட்டமாக அகழாய்வு

தொடர்ந்து அம்பலத்திடலில் கண்டெடுக்கப்பட்ட பழங்கற்கால கற்கோடரியை அறந்தாங்கி தாசில்தார் சூரியபிரபுவிடம் தொல்லியல் ஆய்வுக்கழக நிர்வாகிகள் ஒப்படைத்தனர். பின்னர் அம்பலத்திடலில் ஆய்வு மேற்கொண்ட தாசில்தார் சூரியபிரபு மற்றம் வருவாய் துறை அதிகாரிகள் அங்குள்ள முதுமக்கள் தாழிகள், பழைய கட்டுமானங்களை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், அம்பலத்திடலில் பழங்கால முதுமக்கள் தாழிகள், கட்டுமானங்கள் இருப்பது பற்றியும் கற்கோடரி கண்டெடுக்கப்பப்பட்டு உள்ளதையும் பார்க்கும் போது வரலாற்று சான்றுகள் இருக்கலாம். இதனால் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி அனுமதி பெற்று இடத்தை ஆய்வு செய்தோம். இன்னும் ஒருவாரத்தில் முதல் கட்டமாக அகழாய்வு செய்ய முறையான அனுமதியும் அகழாய்வு பணிகள் செய்யப்படும் என்றார்.

Next Story