இருவேறு விபத்து: தச்சு தொழிலாளி உள்பட 2 பேர் பலி
திருமங்கலம், நாகமலைபுதுக்கோட்டை பகுதிகளில் நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் தச்சு தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்துபோனார்கள்.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் மகாராஜன்(வயது 62). இவர் தச்சு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் ஆலம்பட்டி அருகே திருமங்கலம்-ராஜபாளையம் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அவ்வழியாக திருமங்கலத்தில் இருந்து டி.கல்லுப்பட்டி நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மகாராஜன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கிவீசப்பட்ட மகாராஜன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மதுரையை அடுத்த நாகமலைபுதுக்கோட்டை தட்டானூரை சேர்ந்தவர் உதயகுமார்(வயது 42). இவர் நேற்று முன்தினம் இரவு கீழக்குயில்குடி அண்ணா பல்கலைக்கழகம் அருகே உள்ள முனியாண்டி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது எதிரே வேகமாக வந்த ஆட்டோ ஒன்று, உதயகுமார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த உதயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்.
இதுகுறித்து அவரது சகோதரர் சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோவை ஓட்டிவந்த பழங்காநத்தம் மருதுபாண்டியர் தெருவை சேர்ந்த குமார் மகன் செல்வம் என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story