நடப்பு நிதி ஆண்டிற்கான எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு கிடைப்பது எப்போது? - தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
நடப்பு நிதி ஆண்டிற்கான பட்ஜெட் வெளியாகி 6 மாதங்கள் ஆகியும் எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்காத நிலை உள்ளதால் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதி மக்களின் கோரிக்கைகள் அடிப்படையிலும், தேவைகளின் அடிப்படையிலும் பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக ஒவ்வொரு நிதி ஆண்டும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் இந்த சிறப்பு நிதி ரூ.3 கோடியாக உயர்த்தப் பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நடப்பு நிதி ஆண்டிற்கானபட்ஜெட்டில் வெளியிடப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் பொதுமக்கள் தங்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற பணிகளை நிறைவேற்ற எம்.எல்.ஏ.க்களிடம் தான் வலியுறுத்த வேண்டிய நிலை உள்ளது. தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தாலும் அவர்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே எளிதான காரியம் ஆகும். அதிலும் தொகுதி மேம்பாட்டு நிதி மேலாண்மை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் எம்.எல்.ஏ.க்கள் திட்டப்பணிகள் குறித்து ஊரக வளர்ச்சி முகமைக்கு தெரிவித்தாலும், ஊரக வளர்ச்சி முகமை நிர்வாக அனுமதி வழங்கி திட்டப்பணிகளை மேற்கொள்வது என்பது மிகுந்த கால தாமதத்தை ஏற்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் பட்ஜெட் வெளியாகி 6 மாதங்கள் ஆகியும் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளனர். இதனால் பொதுமக்களும் அத்தியாவசியமான அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படாத நிலை உள்ளதால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். எம்.எல்.ஏ.க்களும் இது குறித்து மக்களிடம் உரிய பதில் கூற முடியாத நிலையும் ஏற்படுகிறது.
எனவே தமிழக அரசு மேலும் தாமதிக்காமல் எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நிதி ஒதுக்கீடு தாமதம் ஆகும் பட்சத்தில் இந்த நிதி ஆண்டிற்கான திட்டப்பணிகள் இந்த நிதி ஆண்டிற்குள் முடிக்கப்படாமல் அடுத்த நிதி ஆண்டு வரை தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே தொகுதி மேம்பாட்டு நிதி உடனடியாக ஒதுக்கீடு செய்யப்படுவது அவசியம் ஆகும்.
Related Tags :
Next Story