இளம் தலைமுறையினர் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் - அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள்


இளம் தலைமுறையினர் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் - அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 9 Oct 2019 4:15 AM IST (Updated: 9 Oct 2019 3:26 AM IST)
t-max-icont-min-icon

இளம் தலைமுறையினர் தங்களின் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள் விடுத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் தமிழியக்கம் சார்பில், சூட்டி மகிழ்வோம், தூய தமிழ் பெயர்கள் என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. தமிழியக்கத்தின் நிறுவனரும், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தருமான விசுவநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாவலர் கருமலை தமிழாழன் வரவேற்றார். மாநில செயலாளர் சுகுமார் சிறப்புரையாற்றினார். தொகுப்பாசிரியர் பார்த்தசாரதி, வடதமிழக ஒருங்கிணைப்பாளர் வணங்காமுடி ஆகியோர் நூல் தொகுப்புரை வழங்கினர். புலவர் பதுமனார் பதிப்புரையும், கவியருவி அப்துல்காதர் நோக்கவுரையும் வழங்கினார்கள். தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புதிய நூல் பதிப்பை வெளியிட, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் பேசுகையில், இந்தியா பல்வேறு மொழிகளை பேசும் நாடு என்றாலும், வேறு மொழிகளுக்கு இல்லாத பெருமை தமிழக்கு மட்டுமே உண்டு. உலகிலேயே அதிக நூல்களை கொண்ட மொழி நம் தமிழ்மொழி. ஒரு காலத்தில் தமிழ் புலவர்கள், சித்தர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த தமிழ் மொழியை அனைத்து விதமான மக்களுக்கும் கொண்டு சென்ற பெருமை மிக்கவர் அண்ணா. காலப்போக்கில் நாம் தமிழை மறந்துவிட்டு அன்னிய மொழியில் பெயர் சூட்டி வருகிறோம். எனவே இவற்றையெல்லாம் நினைவுப்படுத்த ஏற்படுத்தப்பட்டதே தமிழியக்கம். உலக மொழிகள் வரிசையில் 17-வது இடத்தில் தமிழ்மொழி உள்ளது. எனவே தமிழில் பெயர் சூட்டுவோம் என்று பேசினார்.

விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், நம் குழந்தைகளுக்கு தமிழில் பெயர்கள் வைக்க வேண்டும். பெயரில் என்ன இருக்கிறது என்று கேட்கிறார்கள். பெயர் தான் நம் இனத்தின் அடையாளம். இந்தியாவில் கிடைத்த 75 சதவீத கல்வெட்டில், 45 சதவீத கல்வெட்டு தமிழில் உள்ளது. தமிழ் மொழி எவ்வளவு பழமையானது என்று கீழடி ஆய்வு சொல்லும். தமிழனுக்கு மட்டுமே பல்வேறு உறவுகளைச் சொல்லும் ஆற்றல் உள்ளது. வேறு எந்த மொழிக்கும் இந்த பெருமை இல்லை. இளம் தலைமுறையினர் தம் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும்.

இலங்கை, மலேசியா, மொரீசியஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தமிழ் மொழி இரண்டாவது, மூன்றாவது மொழியாக கற்பிக்கப்படுகிறது. அமெரிக்காவில் தமிழ் இரண்டாவது மொழியாக கற்றுத்தரப்படுகிறது. தமிழில் பெயர் சூட்டுவது நம் இனத்திற்கே பெருமை. இந்தியாவில் உயர் கல்வி பெறுவோர் 26.3 சதவீதமாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் உயர் கல்வி படிப்போரின் எண்ணிக்கை தற்போது 49 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று பேசினார்.

விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழி உண்டு. இதற்கு உதாரணம் கீழடியில் நாம் பார்க்கலாம். உலக அளவில் தமிழ்மொழியைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 8,700 நூலகங்களில் தூய தமிழில் பெயர் சூட்டி மகிழ்வோம் என்ற இந்த நூலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது உலகம் முழுவதும் தமிழ் மொழியில் கல்விச்சோலை தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஒளிப்பரப்படுகிறது. உலக நாடுகளில் உள்ளவர்கள் செயற்கைகோள் மூலம் தமிழகத்தின் கல்விச்சோலை தொலைகாட்சி வாயிலாக தமிழ்மொழி கற்க முதல்-அமைச்சரின் அனுமதியுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், செல்லகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் சம்பத்குமார் (அரூர்), கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, குந்தாரப்பள்ளி ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளி தாளாளர் அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நரசிம்மன் நன்றி கூறினார்.

Next Story