ஆயுதபூஜையையொட்டி நாமக்கல்லில் 90 டன் குப்பைகள் அகற்றம்
நாமக்கல் நகராட்சியில் ஆயுதபூஜையையொட்டி தேங்கிய 90 டன் குப்பைகள் அகற்றப்பட்டு உரக்கிடங்குக்கு மறுசுழற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
நாமக்கல்,
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ஆயுதபூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி நாமக்கல் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள லாரி பட்டறைகள், ஓட்டல்கள், தொழில் நிறுவனங்கள் உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தப் பட்டது.
அதற்கு முன்னதாக தொழில் நிறுவனங்கள் சுத்தம் செய்யப்பட்டு, குப்பைகள் தெருக்களின் ஓரத்தில் கொட்டப்பட்டன. மேலும் தங்கள் நிறுவனம் மற்றும் கடைகளில் அலங்கரிக்கப்பட்ட மா இலை, பூக்கள், வாழை மரம் ஆகியவற்றையும் அகற்றி சாலையோரங்களில் கொட்டப்பட்டது. திருஷ்டி பூசணிக்காய் ஆங்காங்கே சாலைகளில் உடைக்கப்பட்டு இருந்தன.
நாமக்கல் நகராட்சியில் உள்ள 39 வார்டுகளிலும் வழக்கமாக 40 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நேற்று வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் குப்பைகள் சேர்ந்தன. இவை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து அகற்றப்பட்டன. நகராட்சி ஆணையாளர் சுதா மேற்பார்வையில் அதனை அகற்றும் பணி நடந்தது.
நேற்று வாழை மரங்கள், பூசணிக்காய் உள்பட மொத்தம் 90 டன் குப்பைகள் அகற்றப்பட்டு, கொசவம்பட்டியில் உள்ள உரக்கிடங்குக்கு மறுசுழற்சி செய்ய அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இப்பணியில் 110 துப்புரவு பணியாளர்கள், லாரிகள் உள்பட 17 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story