சேலம் சரகத்தில், விதிமுறைகளை மீறி இயக்கிய 211 வாகனங்களுக்கு ரூ.4¾ லட்சம் அபராதம் - 3 லாரிகள் பறிமுதல்
சேலம் சரகத்தில் போக்குவரத்து விதி முறைகளை மீறி இயக்கிய 211 வாகனங்களுக்கு ரூ.4 லட்சத்து 91 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப் பட்டது. 3 லாரிகள் பறிமுதல் செய்யப் பட்டன.
சேலம்,
ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை விடுமுறையையொட்டி சேலம் கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆம்னி பஸ்களில் சோதனை நடத்த சேலம், தர்மபுரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு சேலம் சரக போக்குவரத்து துணை ஆணையர் சத்திய நாராயணன் உத்தரவிட்டார். அதன்பேரில் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர். சேலம் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகே மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையிலும், தொப்பூர் சுங்கச்சாவடி அருகே தர்மபுரி வட்டார போக்கு வரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையிலும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர்.
அதிகாரிகள் அந்த வழியாக சென்ற ஆம்னி பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி, பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?, உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா?, அதிகளவு பாரம் ஏற்றப்பட்டுள்ளதா? என போக்குவரத்து விதிமீறல் குறித்து சோதனை நடத்தினர்.
சேலம் சரகத்தில் மொத்தம் 1,310 வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் அதிக பாரம், அதிக எண்ணிக்கையிலான முகப்பு விளக்குகள் பொருத்தப்படுதல், புகைசான்று இல்லாதது, அனுமதி சீட்டு இல்லாமல் மற்றும் வரி செலுத்தாமல் இயக்கப்படுதல் என போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 211 வாகனங்களுக்கு ரூ.4 லட்சத்து 91 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 3 லாரிகள் பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறும் போது, ‘ஆயுதபூஜையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து சேலம் சரகத்தில் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது போக்குவரத்து விதிகளை மீறிய 138 ஆம்னி பஸ்கள் உள்பட 211 வாகனங்களுக்கு ரூ.4 லட்சத்து 91 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும்‘ என்றனர்.
Related Tags :
Next Story