சூலூரில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்: ரூ.4 கோடியில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
சூலூரில் நடந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் ரூ.4 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
சூலூர்,
தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கோவையை அடுத்த சூலூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் வி.பி.கந்தசாமி, எட்டிமடை சண்முகம், கஸ்தூரிவாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரை முருகன் வரவேற்றார்.
முகாமில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அத்துடன் 551 பேருக்கு ரூ.4 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அவர் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் மக்களின் அன்றாட பிரச்சினைகளை நன்கு அறிந்தவர். எனவேதான் மக்களின் குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு ஒரு மாதத்துக்குள் தீர்வு காணப்படும்.
50 ஆண்டு காலம் இல்லாத வளர்ச்சியை 10 ஆண்டுகளுக்குள் கோவை மாவட்டத்துக்கு கொடுத்து உள்ளோம். போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் பல இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோவை விமான நிலைய விரிவாக்க பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
சூலூர் தொகுதியில் திருச்சி சாலையில் உள்ள 8 கி.மீ. தூரத்துக்கு விரிவாக்க பணி தொடங்கப்பட்டு தற்போது முடியும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக விபத்துகள் நடப்பது குறைந்து உள்ளது. இதுதவிர புதிய தீயணைப்பு நிலையம், போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட்டு அமைத்தது, ஆச்சான் குளம் தூர்வாரும் பணிகள், குடிமராமத்து பணிகள் மூலம் பல குட்டைகள் தூர்வாருதல் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், ஆர்.டி.ஓ. தனலிங்கம், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், சூலூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மாதப்பூர் பாலு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தோப்பு க.அசோகன், சூலூர் லிங்கசாமி, பேரூர் கழக செயலாளர்கள் ஏ.சி.மகாலிங்கம், ஆனந்தகுமார், அங்கமுத்து, கார்த்திகைவேலன், சூலூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் ஏ.பி.அங்கண்ணன், கலங்கல் ஊராட்சி செயலாளர் நடராஜன், மீனவர் சங்க தலைவர் ஆறுமுகம், போகம்பட்டி அப்புசாமி, சூலூர் கந்தசாமி, வக்கீல் கந்தநாதன், ராவுத்தர் கூட்டுறவு சங்க தலைவர் வேலுசாமி, சூலூர் பேரூராட்சி செயல் அதிகாரி ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சதாசிவன், பதுவம்பள்ளி செந்தில், வக்கீல் பிரபுராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story