கூடலூரில் ஆசிரியர் வீட்டில் பணம் திருட்டு
கூடலூரில் ஆசிரியர் வீட்டில் பணம் திருடப்பட்டு உள்ளது.
கூடலூர்,
கூடலூர் கோத்தர்வயல் பகுதியில் வசிப்பவர் ஜமால் முகமது. இவர் ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி உமைவா. இவர் ஓவேலி பேரூராட்சி தருமகிரி அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக உள்ளார். இந்த நிலையில் பள்ளிக்கூடங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.
இதனால் கடந்த 5-ந் தேதி அதிகாலை தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் ஜமால் முகமது கேரளா புறப்பட்டு சென்றார். நேற்று காலை 6 மணிக்கு ஜமால்முகமது மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு அனைத்து அறைகளிலும் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தது.
உடனே வீட்டின் அனைத்து பகுதியிலும் ஜமால்முகமது மற்றும் அவரது குடும்பத்தினர் சென்று பார்த்தனர். அப்போது பின்பக்க கதவின் பூட்டை மர்ம ஆசாமிகள் உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் கூடலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ஒவ்வொரு அறைகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது மடிக்கணினி, ரூ.5 ஆயிரம் ரொக்கம், புதிய துணிகள், செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது. பின்னர் ஊட்டியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும் அப்பகுதி மக்களிடமும் போலீசார் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது எந்த பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாமல் உள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து கூடலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story