ஏலகிரிமலையில் பாறைகள் சரிந்து விழுந்தது - போக்குவரத்து பாதிப்பு


ஏலகிரிமலையில் பாறைகள் சரிந்து விழுந்தது - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 9 Oct 2019 3:30 AM IST (Updated: 9 Oct 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

ஏலகிரிமலையில் பாறைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் பாறைகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலை ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது. இங்குசுற்றுலா பயணிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மட்டுமின்றி விடுமுறை நாட்களில் அதிகளவில் வருகின்றனர். இந்த நிலையில் ஆயுதபூஜை விடுமுறையான நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. இதனால் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது.

அப்போது 13-வது கொண்டை ஊசி வளைவில் திடீரென பெரிய பாறைகள் சரிந்து விழுந்தது. இதனால் மேலிருந்து கீழே இறங்கும் வாகனங்களும் கீழிருந்து மேலே செல்லும் வாகனங்களும் செல்வதற்கு வழி இல்லாமல் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஏலகிரிமலை போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்தனர். மேலும் சாலை ஆய்வாளர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் சாலையில் விழுந்து கிடந்த பெரிய பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அவ்வழியாக சென்ற பொதுமக்களும் நெடுஞ்சாலைத்துறையினருக்கு உதவி செய்தனர். சுமார் 1 மணி நேரம் போராடி சாலையில் விழுந்து கிடந்த பாறைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

திடீரென பெரிய பாறை சாலையின் நடுவில் சரிந்து விழுந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

Next Story