குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யக்கோரி தேங்கிய தண்ணீருக்குள் இறங்கி பொதுமக்கள் போராட்டம்


குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யக்கோரி தேங்கிய தண்ணீருக்குள் இறங்கி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2019 3:00 AM IST (Updated: 9 Oct 2019 6:49 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யக்கோரி தேங்கிய தண்ணீருக்குள் இறங்கி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி அருகே திருவள்ளுவர் நகர் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அந்த பகுதியில் பிரதான குடிநீர் குழாய் ஒன்று உள்ளது.

இந்நிலையில் இந்த குடிநீர் குழாயில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வந்து கொண்டிருக்கிறது. அந்த பகுதியில் தேங்கி வருகிறது. எனவே இந்த குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை சரி செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று அந்த பகுதியில் தேங்கிய தண்ணீருக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் பல காலமாக உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வந்து கொண்டிருக்கிறது. குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் அந்த பகுதியில் உள்ள சாலையில் தேங்கி தேங்கி ரோடு சேதமாகிவிட்டது. மேலும், அந்த பகுதியில் பெரிய பள்ளமே ஏற்பட்டு விட்டது.

இதனால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறோம். திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக பொதுமக்கள் பலரும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் குடிநீர் வீணாகி வருவது வேதனையளிக்கிறது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதன் பின்னராவது குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும். அவ்வாறு சரி செய்யவில்லை என்றால் விரைவில் பெரிய போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story