குறிச்சிக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


குறிச்சிக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Oct 2019 9:45 PM GMT (Updated: 9 Oct 2019 1:28 PM GMT)

குறிச்சிக்கோட்டை அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தளி,

உடுமலை அடுத்த தளி அருகே குறிச்சிக்கோட்டை உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உடுமலை - மூணாறு பிரதான சாலையை ஒட்டியவாறு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக டாஸ்மாக்கடை ஒன்று திறக்கப்பட்டது. அங்கு மதுபாட்டில்களை வாங்குவதற்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான போதை ஆசாமிகள் வருகின்றனர். அவ்வாறு வருகின்ற போதை ஆசாமிகள் மோட்டார் சைக்கிள்களை உடுமலை -மூணாறு சாலையில் போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்படுத்தும் விதமாக நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்.

மேலும் போதை ஆசாமிகளுக்கு ஏதுவாக டாஸ்மாக் கடைக்கு அருகில் சாலையில் ஓரத்தில் தள்ளுவண்டி உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது. இதனால் டாஸ்மாக் கடைப்பகுதியில் குறிப்பிட்ட இடைவெளியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி போதை ஆசாமிகள் சாலையின் ஓரத்தில் அமர்ந்து குடித்துவிட்டு வாகனங்களை தாறுமாறாக ஓட்டிச் செல்வதாக கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

இது குறித்து சமூகஆர்வலர்கள் கூறியதாவது:-

முன்பு இந்த டாஸ்மாக் கடை பஸ்நிறுத்தத்திற்கு அருகே செயல்பட்டு வந்தது. அப்போது போதை ஆசாமிகள் பொதுமக்களிடம் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து டாஸ்மாக்கடை மாற்றி அமைக்கப்பட்டது. போதை ஆசாமிகள் மது குடித்துவிட்டு சாலையின் குறுக்காக ஓடுவது, வாகனங்களை வேகமாக ஓட்டிச் செல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக உடுமலை- மூணாறு சாலையில் செல்கின்ற வாகனஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் சிறுசிறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குறிச்சிக்கோட்டை பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் டாஸ்மாக்கடையை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும். இதனால் வாகனஓட்டிகள் பாதுகாப்பான பயணத்தை தொடர்வதற்கு ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story