சப்–இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்: பட்டாசு தொழிலாளி கைது
சிவகாசி அருகே சப்–இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த பட்டாசு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ளது மாரனேரி. இந்த போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து மணல் கடத்தல், அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் உத்தரவின் பேரில் போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மாரனேரி சப்–இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் தலைமை காவலர் மாடசாமி ஆகியோர் மாரனேரி அருகில் உள்ள ஏ.துலுக்கப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த ஊரின் மையப்பகுதியில் உள்ள மந்தையில் பொதுமக்கள் பலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த ஆனந்த் (வயது 30) என்பவர் பொதுஇடத்தில் அசிங்கமாக பேசிக்கொண்டிருந்தார். அவரை சப்–இன்ஸ்பெக்டர் ராஜு கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் அங்கிருந்த ஒரு இரும்பு கம்பியை எடுத்து சப்–இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் தலைமை காவலர் மாடசாமி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜு, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு புகார் செய்தார். அதன் பேரில் ஆனந்த மீது கொலை மிரட்டல் வழக்குபதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story