கோவில் நிலத்தை அபகரிக்க முயற்சி; திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை


கோவில் நிலத்தை அபகரிக்க முயற்சி; திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 9 Oct 2019 11:00 PM GMT (Updated: 9 Oct 2019 3:17 PM GMT)

கோவில் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

பூந்தமல்லி,

திருவள்ளூரை அடுத்த பூண்டி மற்றும் நெய்வேலி கிராம மக்கள் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் பூண்டி மற்றும் நெய்வேலி பகுதியில் வசித்து வருகிறோம். நெய்வேலி கிராமத்தில் வேணுகோபால்சாமி தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. இதனை சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து விற்றுவிட்டனர். இது தொடர்பாக நாங்கள் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். மேலும் அந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மேலும் சிலர் அபகரிக்க முயன்று வருகின்றனர்.

இதை அறிந்து கேட்ட எங்களை அவர்கள் கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனர். இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே கோவில் நிலத்தை அபகரிக்க முயன்று பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் முறையிட வந்ததாக தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story