மாவட்ட செய்திகள்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விவசாய சங்க தலைவர்கள்; மீண்டும் சிறையில் அடைப்பு + "||" + Agrarian Society leaders present at Tarapuram Court with police protection; Back in jail

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விவசாய சங்க தலைவர்கள்; மீண்டும் சிறையில் அடைப்பு

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விவசாய சங்க தலைவர்கள்; மீண்டும் சிறையில் அடைப்பு
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விவசாய சங்க தலைவர்கள் மீண்டும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
தாராபுரம்,

தமிழகத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மத்திய அரசின் பவர்கிரீட் நிறுவனத்தின் மூலம் உயர்அழுத்த மின் கோபுரங்கள் அமைத்து, அதன் மூலமாக மின்சாரம் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இதற்காக விவசாயிகளுடைய விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அதில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. விளைநிலங்களில் உயரழுத்த மின்கோபுரங்களை அமைப்பதால், விவசாயிகளுக்கும், விவசாய உற்பத்திக்கும், கால்நடைகளுக்கும் பல்வேறு வகையில் பாதிப்புகள் ஏற்படும் என புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு, விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக, பூமிக்கு அடியில் கேபிள் புதைத்து அதன் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என, விவசாயிகளும், பல்வேறு விவசாய அமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 13-ந்தேதி தாராபுரம் அருகே உயர்மின் கோபுரம் அமைப்பதற்காக பவர்கிரீட் நிறுவனத்தினர், விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த முயன்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகளும், விவசாய சங்க கூட்டு இயக்கத்தினரும், போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் முத்துவிஸ்வநாதன், தலைமை ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஈசன், திருப்பூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி மற்றும் விவசாயி தங்கமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது சம்பந்தமான வழக்கு தாராபுரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் கைதானவர்களுக்கு, இதுவரை யாருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கில் கைதானவர்களை 9-ந் தேதி (நேற்று) கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இதையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விவசாய சங்கத் தலைவர்கள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தாராபுரம் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். விவசாய சங்கத் தலைவர்கள் கோர்ட்டிற்கு அழைத்து வரப்படுவது தெரிந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், அவர்களை காண தாராபுரம் கோர்ட்டு வளாகத்தில் திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து பாதுகாப்பு கருதி, கோர்ட்டு வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

விவசாய சங்கத்தலைவர்கள் தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் அவர்களை போலீசார் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு விவசாய சங்க தலைவர்கள் அடைக்கப்பட்டனர்.