வேளாண் எந்திரங்களுக்கான வாடகை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்


வேளாண் எந்திரங்களுக்கான வாடகை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
x
தினத்தந்தி 9 Oct 2019 10:30 PM GMT (Updated: 9 Oct 2019 6:51 PM GMT)

வேளாண் எந்திரங்களை வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ெஜயகாந்தன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மாவட்டத்தில் வேளாண் பணியாளா்கள் பற்றாக்குறையினை கருத்தில் கொண்டு, மாநில அரசு வேளாண் எந்திரமயமாக்குதல் திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

அதிக விலையுள்ள வேளாண் எந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளின் நலன் கருதி, வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கும் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கி ஊக்குவித்து வருகிறது. நடப்பு ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் 12 மையங்கள் அமைப்பதற்கு அரசு ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.

சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிக விலையுள்ள வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை சொந்தமாக வாங்கி பயன்படுத்த இயலாததை கருத்தில் கொண்டு, அவற்றை குறைந்த வாடகையில் பெற்று பயனடைய ஏதுவாக வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வட்டார அளவிலான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வாடகை மையம் அமைத்திட 40 சதவீத மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

இந்த மையம் வட்டார அளவில் அமைக்கப்படுவதால் விவசாய பணிகளுக்கு தேவைப்படும் பல்வேறு வகையான வேளாண் எந்திரங்கள், கருவிகள் மற்றும் வேளாண் உபகரணங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் குறைந்த வாடகையில் தேவைப்படும் விவசாயிகளுக்கு கிடைப்பதால் விவசாயப் பணிகளை உரிய நேரத்தில் மேற்கொண்டு நல்ல மகசூல் பெறமுடியும்.

வாடகை மையங்களை அமைக்க முன்னோடி விவசாயிகள், விவசாய சுய உதவிக்குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர் போன்றோர் முன்வரலாம். இந்த வாடகை மையத்திற்கு தேவைப்படும் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை அந்தந்த பகுதிகளில் சாகுபடியாகும் பயிர்கள், மண்ணின் தன்மை, வேலையாட்கள் பற்றாக்குறை ஆகியவற்றினை கருத்தில் கொண்டு தோ்வு செய்து கொள்ளலாம்.

இதற்குரிய விண்ணப்பத்தினை சிவகங்கை மற்றும் தேவகோட்டை வருவாய் கோட்டத்தில் உள்ள ேவளாண்மை உதவி செயற்பொறியாளா்கள் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story