மதகடிப்பட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன


மதகடிப்பட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன
x
தினத்தந்தி 10 Oct 2019 3:45 AM IST (Updated: 10 Oct 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

மதகடிப்பட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

திருபுவனை,

புதுவை - விழுப்புரம் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக திருவண்டார்கோவில், திருபுவனை மற்றும் மதகடிப்பட்டு ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலையை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள கடைகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத் துறை, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் கடைக்காரர்களுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது.

மதகடிப்பட்டு பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் நேற்று காலை வந்தனர். பாதுகாப்புக்காக திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இதை அறிந்த வியாபாரிகள் அங்கு ஒன்று திரண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து சாலையோரம் இருந்த ஜவுளிக்கடை, உணவகம், டீக்கடை, பழக்கடை உள்பட கடைகளின் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. இதனால் மதகடிப்பட்டில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அரசு குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story