மாவட்ட செய்திகள்

மீனவர் அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே கடலுக்குள் செல்ல அனுமதி மீன்வளத்துறை அறிவிப்பு + "||" + Fisheries Department notification only for fishermen's identity cards

மீனவர் அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே கடலுக்குள் செல்ல அனுமதி மீன்வளத்துறை அறிவிப்பு

மீனவர் அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே கடலுக்குள் செல்ல அனுமதி மீன்வளத்துறை அறிவிப்பு
மீனவர் அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கப்படும் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் மீன்பிடி இறங்கு தலங்கள் உள்ளன. ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு அவர்களது பாதுகாப்பு கருதியும், அவர்களுக்கு அரசு அறிவித்த உதவித் தொகைகள் முறையாக கிடைக்கவும், தமிழக அரசின் மீன்வளத்துறை சார்பில், மீனவர் அடையாள அட்டை மற்றும் பயோமெட்ரிக் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீனவர்களுக்கும் மீன்வளத்துறை சார்பில், மீனவர் அடையாள அட்டை மற்றும் பயோமெட்ரிக் கார்டு வழங்கப்பட்டுள்ளது.


கடலுக்கு விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கடற்கரையில் உள்ள மீனவர் சங்க அலுவலகத்திற்கு வரும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம், அவர் எந்த விசைப்படகில் செல்கிறார், அந்த படகின் பதிவு எண், அதன் உரிமையாளர் பெயர், மீனவரது பெயர், முகவரி, செல்போன் எண்களை பதிவுசெய்து கொண்டு அவர் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை அனுமதி வழங்கி வந்தது.

ஆனால் ஒருசில விசைப்படகில் பதிவு செய்யாமல் சில மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று விடுகின்றனர். இதனால் இலங்கை கடற்படையினரிடம் மீனவர்களின் விசைப்படகுகள் சிக்கினாலோ, கடலுக்குள் விபத்துக்கள் நேரிட்டாலோ, கடலுக்கு அந்த குறிப்பிட்ட விசைப்படகில் சென்ற மீனவர்கள் குறித்த முழுமையான தகவல்கள் மீன்வளத்துறைக்கு கிடைப்பதில்லை. இதனால் பல நேரங்களில் சம்பந்தப்பட்ட படகில் சென்ற மீனவர்கள் குறித்த தகவலும், மீன்வளத்துறை பதிவேட்டில் உள்ள தகவல்களும் வேறுபடுகின்றன. இதனால் மீன்வளத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் குழப்பமடைகின்றனர்.

இதனால் இனிமேல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், மீனவர் அடையாள அட்டை அல்லது பயோ மெட்ரிக் கார்டு போன்றவற்றை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பதிவு செய்தால் மட்டுமே கடலுக்கு செல்ல அனுமதி சீட்டு வழங்கப்படும் என மீன்வளத்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதுகுறித்த துண்டு பிரசுரங்களை கடற்கரை மற்றும் மீனவர் சங்க அலுவலகங்களில் ஒட்டி வைத்துள்ளது.

இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கடற்கரையில் பதிவு செய்யும் மீனவர்கள் தவிர வேறு சிலரும் பதிவு செய்யாமல் கடலுக்குள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். மீனவர் அல்லாதவர்கள் கூட சில சமயம் செல்கின்றனர். அவர்களில் சிலர் கடலில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கூட அது கரையில் இருப்பவர்களுக்கு தெரியாது. இது சட்டவிரோதமான செயல். இந்த செயலால் பல தடவைகள் மீன்வளத்துறைக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க மீனவர் அடையாள அட்டை அல்லது பயோ மெட்ரிக் கார்டு இருந்தால் மட்டுமே இனி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியும். இதன் மூலம் மீனவர்கள் போர்வையில் கடலுக்குள் சமூக விரோதிகள் செல்வதையும் தடுக்க முடியும் என்றார். மீன்வளத்துறை எடுத்துள்ள அதிரடி நடவடிக்கையால், கடலுக்கு உண்மையான மீனவர்கள் மட்டுமே மீன்பிடிக்கச் செல்ல முடியும். மேலும் ஆபத்து காலங்களில் கடலுக்கு சென்றது யார் என்பதையும் உடனடியாக அடையாளம் காணமுடியும். எனவே இந்த முடிவை மீனவர்களும் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாக்கு எண்ணும் மைய அடையாள அட்டை வாங்குவதில் தகராறு: மன்னார்குடி ஒன்றிய ஆணையர் அலுவலக பொருட்கள் சூறை
மன்னார்குடியில் வாக்கு எண்ணும் மைய அடையாள அட்டை வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் ஆணையர் அறையில் உள்ள பொருட்கள் சூறையாடப்பட்டன. இதுகுறித்து தி.மு.க.வினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.