மாவட்ட செய்திகள்

தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: மாடியில் இருந்து தூக்கி வீசி சிறுமி கொடூர கொலை - நாடகமாடிய சித்தி கைது + "||" + little girl killed - Stepmother arrested

தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: மாடியில் இருந்து தூக்கி வீசி சிறுமி கொடூர கொலை - நாடகமாடிய சித்தி கைது

தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: மாடியில் இருந்து தூக்கி வீசி சிறுமி கொடூர கொலை - நாடகமாடிய சித்தி கைது
மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுமி பலியான வழக்கில் திடீர் திருப்பமாக அந்த சிறுமியை அவரது சித்தியே மாடியில் இருந்து தூக்கி வீசி கொடூரமாக கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம், சக்கரபாணி தெரு விரிவு, திருமலைநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது மாடியில் வசித்து வருபவர் பார்த்திபன். இவர், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.


இவருடைய முதல் மனைவி சரண்யா, உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இவர்களுடைய மகள் ராகவி(வயது 6). இவர், அருகில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். பார்த்திபன், 2-வதாக சூர்யகலா(33) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

நேற்று முன்தினம் வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டு இருந்த ராகவி, திடீரென மாயமானதாக தனது கணவருக்கு போனில் சூர்யகலா தகவல் தெரிவித்தார். இதற்கிடையில் வீட்டின் அருகில் உள்ள முட்புதரில் சிறுமி பிணமாக கிடந்தாள். முதலில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறிவிழுந்து சிறுமி உயிரிழந்ததாக கூறப்பட்டது.

சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் உதவி கமிஷனர் சகாதேவன் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக தீவிரமாக விசாரித்தனர். ஆரம்பத்தில் இருந்தே போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பேசிய சூர்யகலாவை சந்தேகத்தின்பேரில் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அப்போது அவர்தான் தனது கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த மகள் ராகவியை மாடியில் இருந்து கீழே தூக்கி வீசி கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சூர்யகலாவை போலீசார் கைது செய்தனர்.

பார்த்திபன், சூர்யகலாவை 2-வதாக திருமணம் செய்த புதிதில் ராகவியை அவர் நல்லமுறையில் பார்த்து வந்துள்ளார். தனது கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை என்று இல்லாமல் ராகவி மீது பாசமாக இருந்துள்ளார். அதன்பிறகு சூர்யகலாவுக்கு மகன் பிறந்ததும் ராகவி மீதான அவருக்கு இருந்த பாசம் சற்று குறையத்தொடங்கியது.

மேலும் பார்த்திபன் மற்றும் அவரது பெற்றோர் சூர்யகலாவுக்கு பிறந்த ஆண் குழந்தையைவிட, முதல் மனைவிக்கு பிறந்த சிறுமி ராகவி மீதே அதிக பாசமாக இருந்ததாக தெரிகிறது. இது சிறுமியின் மீது சூர்யகலாவுக்கு மேலும் வெறுப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

இந்தநிலையில்தான் சம்பவத்தன்று காலை பார்த்திபன் வேலைக்கு சென்றதும், வீட்டின் மொட்டை மாடியில் தடுப்புச்சுவர் அருகே நின்று கொண்டிருந்த ராகவியின் கால்கள் இரண்டையும் தூக்கி கீழே வீசி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் எதுவும் தெரியாததுபோல் தனது கணவருக்கு போன் செய்து, ராகவி மாயமானதாக தெரிவித்தார்.

பின்னர் மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுமி இறந்துவிட்டதாக கூறினால் அனைவரும் நம்பி விடுவார்கள் என்பதால் அவ்வாறு கூறி நாடகமாடியதாக போலீசாரிடம் சூர்யகலா தெரிவித்தார்.

கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவரது முதல் மனைவிக்கு பிறந்த சிறுமியை சித்தியே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.