காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: புதுவை முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் அருண் உத்தரவு


காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: புதுவை முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் அருண் உத்தரவு
x
தினத்தந்தி 10 Oct 2019 4:30 AM IST (Updated: 10 Oct 2019 1:08 AM IST)
t-max-icont-min-icon

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு புதுவை முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. அதையொட்டி வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் கலெக்டர் அருண் தலைமையில் மறுஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சப்-கலெக்டர்கள் சுதாகர், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ராகுல் அல்வால், அகன்ஷா யாதவ், போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், நகராட்சி ஆணையர்கள் அர்ஜூன் ராமகிருஷ்ணன் (புதுச்சேரி), கந்தசாமி (உழவர்கரை) மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் அருண் பேசியதாவது:-

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. எனவே மாநிலம் முழுவதும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். பறக்கும் படை அதிகாரிகள் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்களை அழிக்க வேண்டும். வாக்குப்பதிவு மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களை சுத்தமாக வைக்க வேண்டும். தேர்தல் பணிகளில் ஈடுபட மத்திய ராணுவப்படை வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் அவர்கள் தங்குவதற்கு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story