ராமநாதபுரத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: முக்கிய குற்றவாளிகள் 3 பேர் சென்னையில் கைது


ராமநாதபுரத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: முக்கிய குற்றவாளிகள் 3 பேர் சென்னையில் கைது
x
தினத்தந்தி 10 Oct 2019 4:30 AM IST (Updated: 10 Oct 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் முன் விரோதம் காரணமாக வாலிபரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகள் 3 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் பசும்பொன்நகரை சேர்ந்த சேகர் மகன் மணிகண்டன்(வயது26). இவர் கடந்த மாதம் 21-ந் தேதி இரவு ராமநாதபுரம் குமரையாகோவில் அருகில் ஒரு கடையில் சூப் குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் மணிகண்டனை சுற்றி வளைத்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உடல்நிலை கவலைக்கிடமாகவே மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

முன்விரோதம் காரணமாக இந்த பழிக்குபழி சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை அர்ச்சுனன் மகன்கள் முத்துமுருகன்(37), வேலவன்(30), நேருநகர் முதலாவது தெரு ராமமூர்த்தி மகன் முத்துக்குமார்(36) ஆகிய 3 பேரையும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் சுரேஷ்(36), ராமு மகன் திருமூர்த்தி(26), அண்ணாநகர் விஜயராஜ் மகன் வினோத்குமார்(25) ஆகியோரை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் சென்னை எண்ணூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த மேற்கண்ட 3 பேரையும் போலீசார் மடக்கி விசாரித்தபோது ராமநாதபுரத்தில் தேடப்படும் குற்றவாளிகள் என்பது தெரியவந்துள்ளது.

போலீசாரின் தேடுதலுக்கு பயந்து சென்னையில் பதுங்கியிருந்த நிலையில் வேலை செய்து பிழைத்து கொள்ளலாம் என்று கருதி வேலை தேடி செல்வதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை போலீசார் தகவல் தெரிவித்ததன்பேரில் கேணிக்கரை போலீசார் சென்னை சென்று 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story