வாலிபருக்கு டெங்கு பாதிப்பு


வாலிபருக்கு டெங்கு பாதிப்பு
x
தினத்தந்தி 10 Oct 2019 4:00 AM IST (Updated: 10 Oct 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவகால மாற்றத்தின் காரணமாக ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து வந்த வாலிபர் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகஅளவில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளை நாடி வருகின்றனர். ராமநாதபுரம், ராமேசுவரம், திருவாடானை, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள தெற்கு பெருவயலை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் கோபிநாத் (வயது 21) என்பவர் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் என்பது பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் குமரகுருபரன் கூறியதாவது:- மாவட்டத்தில் தற்போது பலருக்கும் ஏற்பட்டுள்ள காய்ச்சல் பருவமாற்றம் காரணமாக உருவாகி உள்ள சாதாரண காய்ச்சல்தான். இதற்காக மக்கள் அச்சப்பட தேவையில்லை. வாலிபர் கோபிநாத் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அங்கு அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு ராமநாதபுரம் பகவதி அம்மன்கோவில் தெரு பகுதியில் உள்ள சித்தி வீட்டிற்கு வந்துள்ளார். அங்கிருந்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் கோபிநாத்தின் குடும்பத்தினர் கேட்டுக்கொள்வதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப உள்ளோம். கோபிநாத்திற்கு சென்னையில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் ராமநாதபுரம் பகவதி அம்மன்கோவில் தெரு, தெற்கு பெருவயல் பகுதிகளில் நோய்தொற்று பரவாமல் தடுக்க கொசு புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. லார்வா கொசுப்புழுக்களை கண்டறிந்து அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அபேட் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 89 பேர் காய்ச்சல் காரணமாக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவாடானை முதுகுளத்தூர் பகுதிகளில் இந்த பருவகால காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் சுகாதாரத்துறை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிப்பிற்காக படுக்கை வசதி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நாள்தோறும் காய்ச்சல் பாதிப்பால் வரும் நோயாளிகளில் தொடர் காய்ச்சல் உள்ளவர்களுக்கு சந்தேகத்தின்பேரில் சராசரியாக 30 பேருக்கு ரத்த பரிசோதனை செய்து வருகிறோம். இவற்றில் யாருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மாநிலம் முழுவதும் டெங்கு பாதிப்பு இருந்தபோதிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த முறை அந்த பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சென்னையில் இருந்து டெங்கு பாதிப்புடன் வாலிபர் வந்துள்ளதால் மாவட்டத்தில் மக்களிடையே டெங்கு அச்சம் ஏற்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story