மாவட்ட செய்திகள்

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரம் - மகேந்திரகிரி திரவ உந்தும மைய இயக்குனர் மூக்கையா தகவல் + "||" + Sending man to the sky To implement the Kaganian program ISRO intensity - Mahendragiri Liquid Motion Center Director Mukkaiya Information

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரம் - மகேந்திரகிரி திரவ உந்தும மைய இயக்குனர் மூக்கையா தகவல்

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரம் - மகேந்திரகிரி திரவ உந்தும மைய இயக்குனர் மூக்கையா தகவல்
2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரம் காட்டி வருவதாக மகேந்திரகிரி திரவ உந்தும மைய இயக்குனர் மூக்கையா தெரிவித்தார்.
தூத்துக்குடி, 

1957-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ந் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக ஸ்புட்னிக் என்னும் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 1967-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி உலக நாடுகள் இடையே விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை நினைவு கூறும் வகையில் ஐ.நா.சபை அக்டோபர் மாதம் 4-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை உலக விண்வெளி வாரமாக அறிவித்து, கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி மகேந்திரகிரி திரவ உந்தும மையம் மற்றும் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி இணைந்து தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் விண்வெளி விளக்க கண்காட்சி நடத்தி வருகிறது. இந்த கண்காட்சி தொடக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு மகேந்திரகிரி திரவ உந்தும மைய இயக்குனர் மூக்கையா தலைமை தாங்கினார். கண்காட்சி கமிட்டி தலைவர் ஜெபசிகாமணி வரவேற்று பேசினார். இஸ்ரோ திட்ட முன்னாள் இயக்குனர் ஆர்.எம்.வாசகம், மகேந்திரகிரி திரவ உந்தும மைய இணை இயக்குனர் அழகுவேலு, துணை இயக்குனர்கள் லூயிஸ் சாம் டைட்டஸ், கோவிந்தராஜன், வ.உ.சி. கல்லூரி செயலாளர் ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம் ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நம்முடைய சூரிய குடும்பத்தை தாண்டி வேறு சூரிய குடும்பத்தை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து ஆராய்ச்சியாளர்களும் மாணவர்களாக இருந்து வந்தவர்கள்தான். அவர்கள் பள்ளியில் படிக்கும் போதே, சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று க‌‌ஷ்டப்பட்டு படித்துதான் பெரிய ஆராய்ச்சியாளராக வந்து உள்ளார்கள். அதன்படி இந்த கண்காட்சி ஒவ்வொரு மாணவருக்கும் வரப்பிரசாதம் ஆகும்.

இஸ்ரோ 1969-ம் ஆண்டு தொடங்கி பல்வேறு வளர்ச்சிகளை பெற்று உள்ளது. சமீபத்தில் சந்திரயான்-2 திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது போன்ற திட்டங்கள் ஏன் செயல்படுத்த வேண்டும் என்று சிலர் விமர்சனம் செய்யலாம். ஆனால் ஒவ்வொரு செயற்கைகோளும் மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்து உள்ளது. தொலை தொடர்பு செயற்கைகோள், பருவநிலையை கண்டறிவதற்கான செயற்கைகோள் உள்ளிட்ட பல்வேறு செயற்கைகோள்கள் மக்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. ஒவ்வொரு நாடும் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தும் போட்டியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தியாவில் குறைந்த செலவில் வெற்றிகரமாக விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆராய்ச்சியாளர்களின் சிறிய கண்டுபிடிப்பும் பெரிய செயற்கைகோளை விண்ணில் செலுத்த உதவும். இந்த கண்காட்சியை பார்க்க வரும் மாணவ-மாணவிகள் டாக்டராக வேண்டும், என்ஜினீயராக வேண்டும் என்று மட்டும் நினைக்காமல், முதலில் பெரியதாக கனவு காணவேண்டும். பெரிய ஆராய்ச்சியாளராக வர வேண்டும் என்று நினைக்க வேண்டும். நீங்கள் நல்ல முயற்சி செய்து படித்து முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மகேந்திரகிரி திரவ உந்தும மைய இயக்குனர் மூக்கையா கூறும் போது, இந்த ஆண்டு இந்திய விண்வெளித்துறையின் தந்தை விக்ரம் சாராபாயின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் 100 இடங்களில் விழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் நெல்லை உள்பட 10 இடங்களில் இந்த நூற்றாண்டு விழா நடக்கிறது. இந்த ஆண்டு உலக விண்வெளி வாரம், நிலா, நட்சத்திரங்களுக்கு செல்வதற்கான வாசல் என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. விண்ணில் பல நட்சத்திரங்கள் உள்ளன. அதில் சூரியனும் ஒரு நட்சத்திரம். பூமி அதில் உள்ள கிரகம். இந்த சூரிய குடும்பத்தை தாண்டி, வேறு கிரககுடும்பங்கள் இருக்கலாம். அங்கு பூமியை போன்ற கிரகங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது என்று கண்டுபிடித்து உள்ளனர். அங்கு மனிதர்கள் வாழும் வாய்ப்பு இருக்கலாம்.

நிலவு நமக்கு அருகில் உள்ள கிரகம். நமது துணைக்கோள். நாம் வேறு கிரகத்துக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு தேவையான அதிக அளவு எரிபொருளை நிரப்பி கொண்டு செல்ல முடியாது. இதனால் நாம் நிலவுக்கு சென்று, அங்கிருந்து எரிபொருள் நிரப்பி கொண்டு வேறு கிரகத்துக்கு செல்ல முடியும். மாணவ-மாணவிகள் முயற்சி செய்து நன்று ஆராய்ச்சியாளர்களாக உருவாக வேண்டும். இந்தியா விண்வெளித்துறையில் முதல் இடத்துக்கு வருவதற்கு உதவ வேண்டும் என்று கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,‘வருங்காலத்தில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத வகையில் மண்ணெண்ணெயில் இயங்கும் எந்திரங்கள் வடிவமைப்பதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இஸ்ரோ நிறுவனம், பிரதமர் அறிவிப்பின்படி 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது தொடர்பாக இஸ்ரோவுக்கு இதுவரை எந்த தகவலும் கிடையாது’ என்றார்.

கண்காட்சியில் விண்வெளி ராக்கெட் மாதிரிகள், ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் என்ஜின்கள், உதிரி பாகங்கள், செயற்கை கோள்களில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் உள்ளிட்டவை கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தன. இரவில் வானில் உள்ள நட்சத்திரங்கள், கோள்களை பூமியில் இருந்து பார்க்கும் வகையிலான தொலைநோக்கி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ள மாதிரிகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. கண்காட்சியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.