வழிகாட்டு கொள்கை மூலம் பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் - மாநில மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தகவல்


வழிகாட்டு கொள்கை மூலம் பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் - மாநில மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தகவல்
x
தினத்தந்தி 9 Oct 2019 10:00 PM GMT (Updated: 9 Oct 2019 8:29 PM GMT)

வழிகாட்டு கொள்கை மூலம் பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று மாநில மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார்.

கோவை,

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் சார்பில் நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை பணியாளர்களுக்கான பணியிட பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட வழிகாட்டு கொள்கை வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில் இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் கோவை காந்திபுரத்தில் நடந்தது. தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் ஜெகதீசன், ஐகோர்ட்டு வக்கீல் செல்வி, சி.சி.எப்.சி. இயக்குனர் டாக்டர் நான்சி, மேலாளர் டாக்டர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

தமிழகத்தில் 7500-க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை மற்றும் நூற்பாலைகள் உள்ளன. இதில் 85 சதவீதம் பேர் பெண்கள்தான் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு சம்பள பிரச்சினை, பாலியல் தொந்தரவு உள்பட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதுபோன்ற பிரச்சினைகளால் பல பெண்கள் வேலைக்கு செல்வது கிடையாது.

எனவே இதுபோன்ற பிரச்சினைகள் பெண்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகதான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வழிகாட்டு கொள்கை வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

கோவை தொழில் நகரம் ஆகும். இங்குள்ள ஏராளமான தொழிற்சாலைகளில் பெண்கள் பலர் வேலை செய்து வருகிறார்கள். இந்த வழிகாட்டு கொள்கை வெளியிடப்பட்டால் பெண்களுக்கு பணி பாதுகாப்பு கிடைக்கும். பெண் தொழிலாளர் களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.

இந்த கொள்கை நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை நிறுவனத்துக்கு எதிரானது அல்ல. இது கொண்டு வந்தால் ஏராளமான பெண்கள் வேலைக்கு செல்வார்கள். இதனால் வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலை மாறும்.

நாங்கள் ஒருபோதும் நிறுவனத்தின் நிர்வாகத்தில் தலையிட மாட்டோம். பெண்களுக்கு உள்ள குறைபாடுகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யதான் வழிவகை செய்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை நிறுவனத்தை சேர்ந்த உரிமையாளர்கள், பெண் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story