புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மொபட்டில் சாராயம் கடத்தி வந்த வாலிபர் கைது


புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மொபட்டில் சாராயம் கடத்தி வந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 Oct 2019 10:15 PM GMT (Updated: 9 Oct 2019 8:29 PM GMT)

புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மொபட்டில் சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர், 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன், போலீஸ்காரர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை இம்பீரியல் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் 2 பேர் சாக்கு மூட்டைகளுடன் வேகமாக வந்தனர். அவர்களை பார்த்ததும் போலீசார் வழிமறித்தனர். ஆனால் அவர்கள் நிற்காமல் சென்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் தங்களது வாகனத்தில் துரத்திச் சென்று இம்பீரியல் சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை சிக்னல் அருகே மடக்கினர்.

அதற்குள் மொபட்டில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் ஒருவர் அதில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டார். இதையடுத்து மொபட்டை ஓட்டி வந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் புதுச்சேரி மாநிலம் பாகூர் மேல வீதியை சேர்ந்த கண்ணையன் மகன் அய்யப்பன் (வயது 32) என்று தெரிந்தது. அவர் கொண்டு வந்த சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்த போது, அதில் 60 லிட்டர் சாராயம் இருந்தது.

இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரித்த போது, அவரும் தப்பி ஓடிய கடலூர் முதுநகர் பெரிய காரைக்காடு ராமமூர்த்தி என்பவரும் சேர்ந்து புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு சாராயத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர். அவரிடம் இருந்து சாராயம், மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ராமமூர்த்தியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story