கூடலூரில் இருந்து குமுளி நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற பாரதீய பார்வர்டு பிளாக் கட்சியினருக்கு போலீஸ் அனுமதி மறுப்பு


கூடலூரில் இருந்து குமுளி நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற பாரதீய பார்வர்டு பிளாக் கட்சியினருக்கு போலீஸ் அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 9 Oct 2019 10:30 PM GMT (Updated: 9 Oct 2019 8:30 PM GMT)

கூடலூரில் இருந்து குமுளி நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற பாரதீய பார்வர்டு பிளாக் கட்சியினரை போலீசார் அனுமதி மறுத்தனர்.

கூடலூர், 

பாரதீய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் முருகன், தேனி மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் நேற்று கூடலூருக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கூடலூரில் இருந்து குமுளிக்கு அக்கட்சியினர் நடந்து செல்ல முயன்றனர். உடனே அங்கு வந்த போடி போலீஸ் துணை சூப்பிரண்டு ஈஸ்வரன், உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னகன்னு ஆகியோர் தலைமையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஊர்வலமாக குமுளி நோக்கி செல்ல அனுமதி மறுத்தனர்.

பின்னர் பாரதீய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக எல்லையில் வனப்பகுதியான குமுளி அருகேயுள்ள அமராவதி பீட் ஆசாரிபள்ளம் என்னுமிடத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 200 குடும்பங்கள் வசித்து வந்தனர். அவர்கள் வனப்பகுதியில் ஏலக்காய், தேயிலை விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 1991-ம் ஆண்டு கேரள-தமிழர்களிடையே கலவரம் ஏற்பட்டது.

இதில் அங்கு இருந்த 145 குடும்பங்கள் வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் எனக் கூறி வனத்துறையினர் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வறுமையில் வாடி வருகின்றன. எனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீண்டும் வனப்பகுதிக்குள் குடியமர்த்த வேண்டும் என்றும் அந்த இடத்தை நேரில் பார்வையிட வந்தேன். மேலும் இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரிடம் புகார் மனுக்களை கொடுக்க முடிவு செய்துள்ளேன்.

வருகிற 15-ந்தேதி அமராவதி பீட் ஆசாரிபள்ளம் என்னுமிடத்தை நேரில் பார்வையிட உள்ளேன். அனுமதி மறுத்ததால், தேனி, திண்டுக்கல், மதுரை மா வட்ட பாரதீய பார்வர்டு பிளாக் கட்சி தொண்டர்களுடன் போ ராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story