ரூ.4,355 கோடி மோசடி வழக்கு பி.எம்.சி. வங்கி முன்னாள் சேர்மன் உள்பட 3 பேரின் போலீஸ் காவல் நீட்டிப்பு


ரூ.4,355 கோடி மோசடி வழக்கு பி.எம்.சி. வங்கி முன்னாள் சேர்மன் உள்பட 3 பேரின் போலீஸ் காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 10 Oct 2019 5:10 AM IST (Updated: 10 Oct 2019 5:10 AM IST)
t-max-icont-min-icon

மும்பை பி.எம்.சி. வங்கியில் நடந்த ரூ.4 ஆயிரத்து 355 கோடி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த வங்கியின் முன்னாள் சேர்மன் உள்பட 3 பேரின் போலீஸ் காவலை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பி.எம்.சி.) நடந்த ரூ.4 ஆயிரத்து 355 கோடி முறைகேடு தொடர்பாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளன. இந்த வழக்கில் தொடர்புடைய எச்.டி.ஐ.எல். ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குனர்கள் ராகேஷ் வாதாவன், அவரது மகன் சாரங் வாதாவன், பி.எம்.சி. வங்கி முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜாய் தாமஸ், வங்கியின் முன்னாள் சேர்மன் வர்யம் சிங் ஆகியோர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

போலீஸ் காவல் நீட்டிப்பு

இந்தநிலையில் ராகேஷ் வாதாவன், சாரங் வாதாவன், வர்யம் சிங் ஆகிய 3 பேரின் போலீஸ் காவல் நேற்று முடிவடைந்தது. இதையடுத்து 3 பேரையும் நேற்று போலீசார் எஸ்பிளனடே மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

அப்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் அவர்களது போலீஸ் காவலை நீட்டிக்க அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட்டு 3 பேரின் போலீஸ் காவலையும் வருகிற 14-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே, பி.எம்.சி. வங்கி மோசடியில் கைதானவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வரப்படுவதை அறிந்ததும் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் ஏராளமானவர்கள் கோர்ட்டு முன் திரண்டு அவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது, ஜெயிலுக்கு அனுப்புங்கள், என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story