வாஷியில் மின்சார ரெயிலில் திடீர் தீ ரெயில் சேவை பாதிப்பால் பயணிகள் அவதி
வாஷியில் மின்சார ரெயிலின் பேண்டோகிராப் கம்பி தீப்பிடித்து எரிந்ததால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் அவதி அடைந்தனர்.
மும்பை,
மும்பை துறைமுக வழித்தடத்தில் நேற்று காலை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து மின்சார ரெயில் ஒன்று பன்வெல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் காலை 9.30 மணியளவில் வாஷி ரெயில் நிலையத்திற்குள் வந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த ஆசாமி ஒருவர் தனது கையில் இருந்த பையை தூக்கி அந்த ரெயிலின் மேற்கூரை மீது வீசினார்.
இதில், ரெயிலுக்கு ஓவர்ஹெட் மின்கம்பியில் இருந்து மின்சப்ளை கொடுக்கும் பேண்டோகிராப் கம்பி மீது அந்த பை விழுந்தது. அப்போது பேண்டோகிராப் கம்பியில் இருந்து ‘டமார்‘ என பயங்கர சத்தம் கேட்டது. இதில் பேண்டோகிராப் கம்பி தீப்பிடித்து எரிந்தது.
பயணிகள் அவதி
சத்தம் கேட்டு ரெயிலில் இருந்த பயணிகள் அலறினார்கள். அவர்கள் பதறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினார்கள். வாஷி ரெயில் நிலையத்தில் இருந்த ரெயில்வே ஊழியர்கள் தீயணைப்பு உபகரணங்கள் மூலம் பேண்டோகிராப் கம்பியில் எரிந்த தீயை அணைத்தனர். இதையடுத்து, ரெயிலில் இருந்து அந்த பெட்டி மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு பணிமனை கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவத்தின் காரணமாக துறைமுக வழித்தடத்தில் 15 நிமிடங்கள் வரை மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. வேலைக்கு செல்லும் காலை நேரம் என்பதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
Related Tags :
Next Story