தடுப்பு கட்டையில் ஸ்கூட்டர் மோதிய விபத்தில் திருச்சி என்.ஐ.டி. மாணவி பலி


தடுப்பு கட்டையில் ஸ்கூட்டர் மோதிய விபத்தில் திருச்சி என்.ஐ.டி. மாணவி பலி
x
தினத்தந்தி 11 Oct 2019 3:45 AM IST (Updated: 10 Oct 2019 9:07 PM IST)
t-max-icont-min-icon

தடுப்பு கட்டையில் ஸ்கூட்டர் மோதிய விபத்தில் திருச்சி என்.ஐ.டி. மாணவி பலியானார்.

திருச்சி,

ேகரள மாநிலம் திருகண்டியூரை சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் அஞ்சலி(வயது 20). இவர் திருச்சி என்.ஐ.டி.யில் உற்பத்தி பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவருடைய நண்பர் சென்னை வேளச்சேரியை சேர்ந்த சாய்ராகவ்(23). முன்னாள் என்.ஐ.டி. மாணவரான இவர் திருச்சி கே.கே.நகரில் தங்கி உள்ளார். அஞ்சலி, இவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மாலை கே.கே.நகருக்கு சென்றார்.

தடுப்பு கட்டையில் மோதி விபத்து

பின்னர், அவர்கள் இருவரும் ஓட்டலில் இரவு உணவு சாப்பிடுவதற்காக கே.கே.நகரில் இருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டனர். திருச்சி-மதுரை சாலையில் தனியார் என்ஜினீயரிங் நிறுவனம் அருகே ஸ்கூட்டர் சென்ற போது, அது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் ஸ்கூட்டர் மோதியது. அப்போது தடுப்பு கட்டையில் இருந்த கம்பியில் அஞ்சலியின் தலை மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

பரிதாப சாவு

உடனே அவரை சாய்ராகவ் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் அஞ்சலியின் நண்பர் காயம் இன்றி உயிர்தப்பினார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தெற்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் அஞ்சலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story